Published : 11 Feb 2014 09:40 AM
Last Updated : 11 Feb 2014 09:40 AM
காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் மதுரையில் திங்கள்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா?
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்துவது, தமிழகத்தை இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியில் இருந்து மீட்பது என்ற இரண்டு லட்சியங்களுக்காக உழைப்போம். அதற்காகவும், இந்தியப் பிரதமராக மோடியை அமர்த்துவதற்காகவும் தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு காந்திய மக்கள் கட்சி மிகக் கடுமையாகக் களப்பணி ஆற்றும்.
பா.ஜ.க.-தே.மு.தி.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது?
ப: இன்றுவரை நிலைமை சரியில்லை. திங்கள்கிழமை காலையில்கூட பா.ஜ.க. தலைமையிடம் இருந்து விஜயகாந்திடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அவர் முடிவைச் சொல்லவில்லை.
ஊழலுக்கு எதிராக அவர் மாநாடு நடத்தியது உண்மை என்றால், காங்கிரஸ், தி.மு.க. இரண்டுக்கும் எதிரான நிலையை எடுத்திருக்க வேண்டும்.
இப்போது அவருக்கு முன் இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். பா.ஜ.க.வை ஆதரிப்பது, அல்லது அவர்கள் ஆட்சியிலும் ஊழல் நடந்திருக்கிறது என்று தனித்து நிற்பது.
தனித்து போட்டியிட தயாரா?
பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் இன்றுவரை வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. அந்த இரண்டு கட்சிகளும் இன்னமும் பா.ஜ.க.வுடன் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், வெளியில் தாங்கள் தனித்து நிற்பதைப் போலவே காட்டிக்கொள்கிறார்கள். அப்படியானால் நீங்கள் நடத்துவது அரசியலா? அல்லது தரகு பேரமா?.
விஜயகாந்த்தால் ஜெயலலிதா முதல்வர் ஆனாரா? இல்லை ஜெயலலிதாவால் இவர் அதிக இடங்களில் வெற்றி பெற்றாரா? என்ற உண்மை தெரிய வேண்டுமானால், கண்டிப்பாக தனித்துப் போட்டியிட வேண்டும். இந்த சவாலை ஏற்க அவர் தயாரா?
மதவாதத்தை எதிர்க்கும் நீங்கள், பா.ஜ.க. என்ற மதவாத அமைப்பை ஆட்சிக்குக் கொண்டு வர ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்?
நான் பா.ஜ.க.வின் கொள்கைகளை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்பவனாக இருந்தால், அந்தக் கட்சியிலேயே சேர்ந்திருப்பேனே? தேர்தல் கூட்டணிக்கும், கொள்கையோ, சித்தாந்தமோ இருந்தது கிடையாது.
இன்னொரு விஷயம், மோடியின் சமீபத்திய பேச்சுகள் அனைத்தும், இந்துக்களின் நலன் என்பதில் இருந்து இந்தியனின் நலன் என்று மாறியிருக்கிறது. எனவே, அவர் இந்தியர்களுக்கான ஆட்சியைத் தருவார் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை பொய்க்குமானால், அதற்கு எதிராக போராடுபவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.
நீங்கள் வைகோவின் அபிமானி என்பதை அறிந்துகொண்டதால்தான், உங்கள் கூட்டணி முயற்சிக்கு விஜயகாந்த் உடன்படவில்லையா?
வைகோவை நான் தீவிரமாக ஆதரிப்பவன். அவரை தமிழக முதல்வராக்க வேண்டும் என்று மேடைதோறும் முழங்குபவன். அதுவேறு. அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள். சட்டமன்றத் தேர்தலாக இருந்தால், நான் உங்களிடம் வந்து நின்றிருக்க மாட்டேன். மோடியா?, ராகுலா? என்ற நிலையில் மக்களவைத் தேர்தல் வருவதால்தான் உங்கள் ஆதரவைக் கேட்கிறேன். எனவே, இப்போது ஒரே அணிக்கு வாருங்கள். சட்டமன்றத் தேர்தல் வரும்போது வேண்டுமானால், நீங்களும் சரி, அன்புமணி ராமதாஸ், வைகோ போன்றவர்களும் முதல்வர் பதவிக்கு முயன்று பார்க்கட்டும் என்றேன்.
இப்போதும், அவரின் நலன் விரும்பும் நண்பராகக் கேட்கிறேன். பா.ஜ.க. அணிக்கு வாருங்கள். காங்கிரஸ் அல்லது தி.மு.க. கூட்டணிக்குச் சென்றால், நீங்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு உங்களுக்கு அரசியல் கிடையாது.
முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நெருங்க நெருங்க ஜாதி அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளதே? தற்போதுகூட ஒரு ஜாதி விழாவை அரசு விழா போல் நடத்தி உள்ளாரே?
ஜாதி இல்லை என்று சொல்பவர்களும், நாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்பவர்களும் அவற்றை மையமாக வைத்துத்தான் அரசியல் செய்கிறார்கள். மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தினரின் வாக்குகளைப் பெற என்னென்ன செய்கிறார்கள் என்பதை நாடு அறியும். இந்த நாட்டில் உண்மையான ஜாதிச் சார்பற்ற கட்சியும் கிடையாது. மதச்சார்பற்ற கட்சியும் கிடையாது.
மற்றவர்கள் கேட்கத் தயங்கும் மற்றொரு கேள்வியை நான் வெளிப் படையாகக் கேட்கிறேன். 80 சதவிகிதம் இந்துக்களைக் கொண்ட இந்த நாட்டில் முழுக்க முழுக்க இந்துக்களுக்காக ஒரு கட்சி இல்லை. ஆனால், முஸ்லிம் லீக் என்று ஒரு கட்சி இருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் மதச்சார்பற்ற என்ற வார்த்தை உள்ளது. அதாவது, மதச்சார்பற்ற நாடு என்று இருக்கிறபோது, மதச்சார்பற்ற அரசு என்று இருக்கிறபோது, மதத்தின் பெயரால் ஒரு கட்சி எதற்கு?.
முஸ்லிம் லீக்கை பக்கத்தில் வைத்திருக்கும் கருணாநிதி மதச்சார்பற்றவர், பா.ஜ.க.வின் பக்கத்தில் இருக்கும் தமிழருவி மணியன் மதவெறியர் என்பது எந்த வகையில் நியாயம்? தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சரி ஜாதி, மதச்சார்பில்லாத கட்சியே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கட்சியின் புதிய நிர்வாகிகளை பத்திரிகையாளர்களுக்கு அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT