Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
தமிழகத்தில் முதல்முறையாக ஒரு காவல் நிலையம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தில் ஜொலிக்கப் போகிறது.
சூரிய ஒளி மின்சாரத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் திறப்பு விழா காணத் தயாராக இருக்கிறது அந்த பெருமையைப் பெறப்போகும் நாகப்பட்டினம் நகர காவல் நிலையம்.
ஊராட்சிகளில் சூரிய ஒளி மின்சாரத்தில் தெருவிளக்குகள் ஒளிர்வதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது பற்றிக் கேள்விப்பட்டி ருக்கலாம், படித்தும் இருக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாயி சூரிய ஒளி அமைப்பை ஏற்படுத்தி சாகுபடி மேற்கொண்டு வருகிறார். இது எல்லாவற்றிலும் மாறுபட்டதாக காவல் நிலையத்தில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பதுதான் புதுமையான விஷயம்.
நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியின் ஆர்வம் காரணமாக இத்திட்டம் செயல் படுத்தப்பட்டிருக்கிறது. நாகப்பட்டினம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பை அணுகி இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். அவர்களின் நிதியளிப்போடு மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது சோலார் பேனல் தகடுகள். நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தின் மொட்டை மாடியில் 15-க்கு 10 அடி என்ற அளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சோலார் பேனல் 2 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. இதன் மூலம் நகரக் காவல் நிலையத்தின் முழு மின் தேவையையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
“எஸ்.பி. இப்படி ஒரு யோசனையை சொன்னதும் நாங்கள் தட்டாமல் உடனே ஏற்றுக்கொண்டோம். காரணம் தற்போதைய நிலையில் மின் உற்பத்திக்கு நாடு கொடுத்துவரும் முக்கியத்துவத்தை நாங்களும் உணர்ந்திருக்கிறோம். மொத்தம் நான்கரை லட்சம் ரூபாய் வரை இதற்காக செலவழித்திருக்கிறோம். இத்தகைய பணியில் நாங்கள் பங்கேற்றுகொண்டது எங்களுக்கு பெருமைதான்” என்கிறார் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் முருகையன்.
நகர காவல் நிலையத்தில் தற்போது ஆகும் மின்சார கட்டணத்தை வைத்து கணக் கிட்டால் 3 ஆண்டுகள் கட்டும் மின் கட்டணத் தொகைக்கு நிகரானது இந்த நான்கரை லட்சம் ரூபாய். அதற்குப் பிறகு கிடைக்கும் மின்சாரம் முழுவதும் உபரிதான். இந்த திட்டத்தின் மூலகர்த்தாவான காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறியது:
“இந்த முயற்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட மத்திய மண்டல ஐஜி தானே நேரில் வந்து திறந்து வைப்பதாக சொல்லியிருக்கிறார். அதனால் இந்த வார இறுதிக்குள் இது பயன்பாட்டுக்கு வந்துவிடும். இதன் வெற்றியைத் தொடர்ந்து மற்ற ஊர்களிலும் வர்த்தகர்கள் ஒத்துழைப்போடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT