Published : 05 Nov 2013 09:14 AM Last Updated : 05 Nov 2013 09:14 AM
கூடங்குளத்தில் 6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மின் உற்பத்தி
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 6 நாள்களுக்குப் பின் மீண்டும் மின் உற்பத்தி திங்கள்கிழமை மாலை தொடங்கியது.
400 மெகாவாட்டைக் கடந்து 500 மெகாவாட்டை எட்டுவதற்கு முன் மீண்டும் டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படவுள்ளதாக, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் அக்டோபர் 22ம் தேதி, அதிகாலை 2.45 மணிக்கு, 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. பின்னர் அதிகாலை 5.45 மணிக்கு டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிலைகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ரஷ்ய விஞ்ஞானிகளுடன், இந்திய அணுமின் கழக விஞ்ஞானிகளும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆய்வுகளைத் தொடர்ந்து, அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் ஒப்புதலின் அடிப்படையில், அக்டோபர் 25ம் தேதி இரவு 9.43 மணிக்கு, 2-வது முறையாக டர்பைன் இயக்கப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கியது.
அக்டோபர் 29-ம் தேதி இரவு 8 மணியளவில் மின் உற்பத்தி, 300 மெகாவாட்டை தாண்டியதும் டர்பைன் இயக்கம் படிப்படியாக நிறுத்தப்பட்டது. மீண்டும் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவை திருப்தி அளித்ததை அடுத்தும் அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்தின் அனுமதியுடன் 3-வது முறையாக, திங்கள்கிழமை மாலை 4.11 மணிக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது.
முதலாவது அணு உலையில் மாலை 4.28 மணிக்கு 160 மெகாவாட், 4.55 மணிக்கு 232 மெகாவாட் என்ற அளவில் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்ததாகவும், இந்த மின் உற்பத்தி 400 மெகாவாட்டை தாண்டி, 500 மெகாவாட்டை எட்டும் முன், டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்படவுள்ளதாகவும், அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
டர்பைன் இயக்கம் நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அணு உலைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அணுப்பிளவு தொடர்வினை செயல்பாடு நிகழ்ந்துகொண்டே இருக்கும்.
தூத்துக்குடி அனல்மின் நிலைய 2 யூனிட்டுகளில் பழுது சீரமைப்பு...
இதனிடையே, தூத்துக்குடி அனல்மின் நிலை யத்தின் மூன்று யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டதில், இரண்டு யூனிட்டுகள் சரி செய்யப்பட்டன. மற்றொரு யூனிட்டில் பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து யூனிட்டுகள் உள்ளன. இதில், ஏதாவது ஒரு யூனிட்டில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வருகிறது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் 3 யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டது.
அனல்மின் நிலையத்தின் முதல், மூன்று மற்றும் நான்காவது யூனிட்டுகளில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டதால், 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மூன்று யூனிட்டுகளிலும் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில், அனல் மின் நிலைய பொறியாளர்கள் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டனர்.
இதனால், முதலாவது யூனிட் மற்றும் நான்காவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சரி செய்யப்பட்டது. அவ்விரு யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. ஆனால், மூன்றாவது யூனிட்டில் ஏற்பட்ட பழுது திங்கள்கிழமை மாலை வரை சரி செய்யப்படவில்லை.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, நான்கு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடைபெற்றது. இதனால், 750 முதல் 800 மெகாவாட் வரை மின் உற்பத்தி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
WRITE A COMMENT