Last Updated : 03 Nov, 2014 08:31 AM

 

Published : 03 Nov 2014 08:31 AM
Last Updated : 03 Nov 2014 08:31 AM

தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது: புதுக்கட்சி தொடங்கும் அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் வாசன்

ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதுக்கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனார், கூட்டணி விவகாரத்தில் கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து 1996-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். திமுகவுடன் கூட் டணி அமைத்து வெற்றி பெற்ற தமாகா, முக்கிய கட்சியாக உரு வெடுத்தது. 2001-ல் மூப்பனார் மறைவுக்கு பிறகு தமாகா தலைவ ராக ஜி.கே.வாசன் பொறுப்பேற் றார். பின்னர், 2002-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸுடன் தமாகாவை இணைத்தார். மத்திய காங்கிரஸ் அரசில் அமைச்சரானார் வாசன். தனது ஆதரவாளரான ஞானதேசிகனை தமிழக காங்கிரஸ் தலைவராக கொண்டுவந்தார்.

இந்நிலையில், மாநில தலை மையை கட்சி மேலிடம் புறக்கணிப்ப தாக கூறி, கடந்த 30-ம் தேதி தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜி னாமா செய்தார். இதையடுத்து, புதிய கட்சி தொடங்க ஜி.கே.வாசன் முடிவு செய்துவிட்டதாக கூறப்படு கிறது. இதுகுறித்து கடந்த 3 நாட்க ளாக தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் வாசன், தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக வாசனின் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுடன் வாசன் நேற்று முன்தினம் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். கோவை சென்ற அவர், அவிநாசி, ஈரோடு, சேலம், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டல நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டார். எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ரெங்கராஜன், ஜாண் ஜேக்கப் மற்றும் 20 மாவட்டத் தலைவர்கள், 20 மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சென்னை நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டலில் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். புதுக்கட்சி தொடங்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்துகின்றனர். இன்று மதியம் தனிக்கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

‘காமராஜர், மூப்பனார் வழியில் செயல்படுவோம்’

திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காமராஜர், மூப்பனார் உட்பட மறைந்த காங்கிரஸ் தலைவர்களின் வழியில் எங்களது செயல்பாடுகள் இருக்கும். எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை, தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த பணிகள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அடித்தளமாக அமையும் என நம்புகிறேன்.

தமிழக மீனவர் பிரச்சினையில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் பாஜக அரசு எடுக்கவில்லை. தற்போது, இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு வாசன் கூறினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றார் வாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x