Published : 02 Jul 2016 08:12 AM
Last Updated : 02 Jul 2016 08:12 AM
வடகிழக்குப் பருவமழையின் போது மழைநீர் தங்கு தடையின்றி கடலுக்குப் போவதற்கு கூவம், அடையாறு போன்ற நீர்வழிப் பாதைகளில் குப்பையை அகற்றி, தூர்வாரும் பணி சுமார் ரூ.5 கோடி செலவில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் 2 நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். பருவமழைக்கு முந்தைய பணிகளுக்கான குறுகிய கால டெண்டர் விடப்பட்டு, பணிகளை ஒரு மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அடை மழையால் சென்னை மாநகர் பெரிதும் பாதிக்கப்பட்டது. உயிரிழப்புடன் இதுவரை இல்லாத அளவுக்கு பொருள் இழப்பும் ஏற்பட்டது.
சென்னையில் பல இடங்களில் மழை வெள்ளம் ஊருக்குள் புகுந்ததற்கு கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழிப் பாதைகளிலும், சிறிய கழிவுநீர் கால்வாய்களிலும் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளும், குப்பை கொட்டியதால் ஆங்காங்கே ஏற்பட்ட அடைப்புகளுமே காரணம் என்று கூறப்பட்டது.
அதனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது குறித்து அரசு தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கடந்த 2 நாட்களாக முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஆரணியாறு வடிநிலப் பகுதிகள், கொசஸ் தலையாறு வடிநிலப் பகுதிகள், கீழ்பாலாறு வடிநிலப் பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய பணிகளை மேற்கொள்ள ரூ.5 கோடியே 9 லட்சம் கோரப் பட்டது. அரசு ரூ.3 கோடியே 62 லட்சம் வழங்கியது. இந்த ஆண்டு இப்பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடி கோரப்பட்டுள்ளது. இதில், சுமார் ரூ.5 கோடி வரை அரசு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாளில் வெளியிடப்படும்.
மேற்கண்ட தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறுகிய கால டெண்டர் விடப்பட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள நீர்வழிப் பாதைகளில் குப்பையை அகற்றி, தூர்வாரி சுத்தம் செய்யும் பணி தொடங்கும். இப்பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும். அதன்பிறகு டிசம்பர் மாதம் வரை அதாவது வடகிழக்குப் பருவமழை முடியும் வரை நீர்வழிப் பாதைகளில் தேங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகரில் பருவ மழைக்கு முந்தைய பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளன. அதன்படி, மாநகரில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், விருகம்பாக்கம் ஓட்டேரி நல்லா கால்வாய் போன்ற நீர்வழிப் பாதைகளில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகள், குப்பை, மிதக்கும் திடக் கழிவுகள் போன்றவை முதலில் அகற்றப்படும். பின்னர் மிதக்கும் இயந்திரம், பொக்லைனைக் கொண்டு நீர்வழிப் பாதைகள் தூர்வாரப்படும்.
நீர்வழிப் பாதைகளில் கொட்டப்படும் குப்பையால் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க குறிப்பிட்ட இடங்களில் ஆற்றின் குறுக்கே வலையுடன் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தேங்கும் குப்பை, குறிப்பிட்ட கால இடைவெளியில் அள்ளப்படுகின்றன. இதனால் கடலின் முகத்துவாரத்தில் குப்பை போய் அடைத்துக் கொள்ளாது. மழைநீர் தங்கு தடையின்றி கடலில் சென்று சேரும். இதுவரை கூவம் ஆற்றில் மட்டும் 6 இடங்களில் வலையுடன் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீர்வழிப் பாதைகளில் கொட்டப்படும் குப்பையால் ஆங்காங்கே அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க குறிப்பிட்ட இடங்களில் ஆற்றின் குறுக்கே வலையுடன் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் தேங்கும் குப்பை, குறிப்பிட்ட கால இடைவெளியில் அள்ளப்படுகின்றன. இதனால் கடலின் முகத்துவாரத்தில் குப்பை போய் அடைத்துக் கொள்ளாது. மழைநீர் தங்கு தடையின்றி கடலில் சென்று சேரும். இதுவரை கூவம் ஆற்றில் மட்டும் 6 இடங்களில் வலையுடன் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சென்னை மாநகராட்சி பராமரிக்கும் சிறிய கால்வாய்களில் குறிப்பாக மக்கள் குப்பை கொட்டும் இடங்களில் 5 மீட்டர் உயரத்துக்கு வலை அடிக்கப்படுகிறது. இருப்பினும், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குப்பை கொட்டுவதைத் தடுப்பது குறித்தும், நீர்வழிப் பாதைகளில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் ஆபத்து பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT