Published : 08 Feb 2014 12:00 AM
Last Updated : 08 Feb 2014 12:00 AM
இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேட்டி அணிந்து பணிக்கு வருவது என தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்துள்ளனர்.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரும் அணியச் செய்யும் வகையிலும் கடந்த மாதம் `வேட்டி தினம்’ அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் வேட்டி தினம் கடைபிடித்து ஊழியர்களும் மாணவர்களும் ஒரு நாளாவது வேட்டி அணிந்து வரும்படி கடிதமும் எழுதினார் சகாயம்.
வேட்டியில் வந்த 16 ஆட்சியர்கள்
இதற்கு தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்தது. மாவட்ட ஆட்சியர்கள் 16 பேர் வேட்டி அணிந்து வந்து வேட்டி தினம் கொண்டாடினார்கள். வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கோ - ஆப்டெக்ஸில் மட்டுமே இதுவரை சுமார் ஒரு லட்சம் வேட்டிகள் விற்பனையாகி உள்ளன. பாரம்பரிய உடையான வேட்டியின் மரபைக் காக்கும் வகையில் தொடர்ந்து வேட்டி தினத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது கோ-ஆப்டெக்ஸ்.
இனி வெள்ளிதோறும் வேட்டி
இதன் அடுத்தகட்டமாக இனி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவருமே வேட்டி அணிந்து வருவது என முடிவெடுத்திருக்கிறார்கள். இதன்படி, நேற்று (பிப்.7) அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம், “அரசு அலுவலகங்களில் வேட்டியை சீருடையாக அணிந்து வருவது இதுதான் முதல்முறை. தமிழகம் முழுவதும் கோ- ஆப்டெக்ஸின் எட்டு மண்டலங்களில் உள்ள 130 ஷோரூம்களில் சுமார் 800 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களோடு சேர்ந்து தலைமை அலுவலகத்தில் உள்ள நாங்களும் இனி வெள்ளிதோறும் வேட்டி தினம் கடைபிடித்து வேட்டி அணிந்து வருவது என முடி வெடுத்திருக்கிறோம். இதைப்போல மற்ற அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் கல்லூரிகளும் முடிவெடுத்தால் நெசவாளர்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும்’ என்றார்.
மகளிர் தினத்துக்குள் `தாவணி தினம்’
கடந்த இரண்டு மாதங்களில் பட்டு வகைகளில் மாத்திரம் புதிதாக 200 மாடல்களை அறிமுகம் செய்திருக்கும் கோ-ஆப்டெக்ஸ், அடுத்த இரண்டு மாதத்தில் புதிதாக இன்னும் 1,200 வகையான மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறதாம்.
வேட்டி தின வெற்றியைத் தொடர்ந்து இளம் பெண்களுக்காக `தாவணி தினம்’ அறிவிக்கப் போவதாக ஏற்கெனவே `தி இந்து’விடம் சொல்லி இருந்தார் சகாயம்.
இந்தச் செய்தி வெளியானதில் இருந்து தாவணிக்கான ஆர்டர்களும் குவியத் தொடங்கிவிட்டதாக சொல்லும் சகாயம், `தாவணியும் தமிழர்களின் மரபுசார்ந்த உடைதான். அந்த மரபுக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்துக்கு முன்பாக ஏதாவது ஒரு நாளில் பெண்கள் அனைவரும் தாவணி அல்லது சேலையில் வருகை தந்து தாவணி தினம் கொண்டாட வேண்டும். இதுகுறித்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி- கல்லூரிகளுக்கும் கடிதம் எழுத இருக்கிறோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT