Published : 17 Feb 2014 10:00 AM
Last Updated : 17 Feb 2014 10:00 AM
தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதைக் கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் நடத்திய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றனர்.
விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் வளம் அழிவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது என்றும், இதை தடுக்கக் கோரியும் ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் பிப்.9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வந்தனர்.
ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகம் எதிரே கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும், பாம்பனில் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டமும், நம்புதா ளையில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் 6 மாவட்ட மீனவப் பிரநிதிகள் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஜனவரி 27-ம் தேதி நடைபெற்ற தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தையின்போது இலங்கை மீனவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிப்.13-ம் தேதி முதல் மார்ச் 10 வரை கடலுக்குச் செல்லக் கூடாது. மேலும் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என தமிழக மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
இது குறித்து மீனவப் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், இத்தீர்மானத்தைத் தொடர்ந்து நாட்டுப் படகு மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம்.
ஆனால், திட்டமிட்டபடி பிப்.28-ம் தேதி தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிடுவோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT