Published : 20 Mar 2017 12:00 PM
Last Updated : 20 Mar 2017 12:00 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுவதால், பாசனக் குளங்கள் அனைத்தும் வறண்டு மேய்ச்சல் நிலம் போல் மாறி விட்டன. தண்ணீரின்றி 50 சதவீத பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைகாலமான ஏப்ரல், மே மாதத்தில்கூட வேளாண்மை பயிர் களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் குளத்து பாசனம் கைகொடுக்கும். ஆனால், இது வரை இல்லாத அளவுக்கு கடந்த சீஸனில் பருவமழை சரிவர பெய் யாததால் அணைகள், பாசனக் குளங்கள் அனைத்தும் வற்றி விட்டன.
அனல் பறக்கும் வெயில்
கடந்த ஒரு மாதமாக ஆங் காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. அணை, மலைப்பகுதி களில் கனமழை பெய்தது. ஆனால், தொடர்ச்சியாக மழை பெய்யாத தால் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் கோடை தொடங்கும் முன்பே தற்போதே அனல் பறக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்துள்ளது. அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றுலா மையங்களை பயணிகள் பார்வையிடுகின்றனர். பகல் நேரங்களில் விடுதிகளில் அவர்கள் ஓய்வெடுக்கின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
குமரி மாவட்டத்தில் கிராம, நகரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளில் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பதில்லை. ஊராட்சி குடிநீர் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் வாரத்துக்கு இரண்டு முறை குடிநீர் விநியோகம் செய்வதே கடினமாக உள்ளது.
கோடையின் போது பாசனத்துக்கு தண்ணீர் கொடுக்கும் 2,500க்கும் மேற்பட்ட குளங்கள் அனைத்தும் வற்றி மேய்ச்சல் நிலம் போல் மாறி விட்டன. இவற்றில் வளர்ந்துள்ள புற்களை செம்மறி ஆடுகள் மற்றும் கால்நடைகள் கூட்டமாக மேய்கின்றன. வறட்சியான நேரத் தில் கால்நடைகளின் தீவனத்துக்கு குளங்கள் மட்டுமே கைகொடுக் கின்றன.
50 சதவீத பயிர்கள் கருகின
இதுகுறித்து தக்கலையை சேர்ந்த விவசாயி நடராஜன் கூறும்போது, ‘‘நான் 40 ஆண்டுகளுக்கும் மேல் விவசாயம் செய்து வருகிறேன். இதற்கு முன்பும் மழை குறைவாக இருந்த காலங்கள் உண்டு. ஆனால், கோடைகாலத்தில் இதை ஈடுகட்டும் வகையில் கனமழை பெய்யும். தற்போது நிலவுவது போல் கடும் வறட்சி ஏற்படவில்லை.
தண்ணீரின்றி 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தென்னை, வாழை, மரவள்ளி கிழங்கு, ரப்பர் பயிர்கள் கருகி விட்டன. கோடைமழை கைகொடுத்தால் மட்டுமே வறட்சியிலிருந்து மீளமுடியும். மழை தொடரும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்’’ என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT