Published : 04 Jan 2016 08:00 AM
Last Updated : 04 Jan 2016 08:00 AM
*
சென்னையில் காய்கறிகளின் விலை உச்சத்தில் இருப்பதால் பண்ணை பசுமை கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரண மாக கடந்த இரு மாதங்களாகவே சென்னையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் 50 இடங்களில் தற்காலிக பண்ணை பசுமை கடைகள், 11 நகரும் கடைகள் திறக்கப்பட்டதால் காய்கறிகளின் விலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண் டும் காய்கறிகளின் விலை உயரத் தொடங்கியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் கோஸ், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, பீட்ரூட் ஆகி யவை மட்டுமே கிலோ ரூ.20-க்கு கீழே விற்கப்படுகின்றன. மற்ற காய்கறிகள் ரூ.40 முதல் ரூ.100 வரை விற்கப்படுகின்றன. ஜாம்பஜார் போன்ற சில்லறை மார்க்கெட்டுகளில் முட்டை கோஸ், உருளைக்கிழங்கு மட்டுமே கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகின்றன. மற்றவை அதிக விலையிலேயே விற்கப்படுகின்றன. கடந்த வாரம் ரூ.32 வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. பண்ணை பசுமை கடைகளில் ரூ.50 ஆக உள்ளது. கேரட் ரூ.50-லிருந்து ரூ.82 ஆகவும், முருங்கைக் காய் ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் எம்.சவுந்தரராஜன் கூறும்போது, “தமிழகம் மற்றும் ஆந்திரம்- தமிழக எல்லையோர பகுதிகளில் பெய்த கனமழையால் பயிர்கள் அழுகின. தற்போது பனி பொழிவதால், பூக்கள் உதிர்கின்றன. அதனால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 300 லோடாக இருந்த காய்கறிகள் வரத்து 240 லோடாக குறைந்து விலை அதிகரித்துள்ளது” என்றார்.
திருவல்லிக்கேணியில் உள்ள பண்ணை பசுமை கடைக்கு காய் கறி வாங்க வந்த ஆர்.வசந்தி கூறும் போது, “பண்ணை பசுமை கடை களில் காய்கறிகள் தரமாகவும், வாடாமலும் உள்ளன. ஆனால் வெளிச் சந்தையை விட சில ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது. அதனால் பண்ணை பசுமை கடைகளில் மானிய விலையில் காய்கறிகளை வழங்க வேண்டும்” என்றார் கூறினார்.
எம்.திலகா கூறும்போது, “பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. தற்போது எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.40-க்கு மேல்தான் விற்கப்படுகின் றன. இதனால் காய்கறி செலவு ஒரு நாளைக்கு ரூ.150 வீதமும், மாதம் ரூ.4500 வரையும் ஆகிறது. இது நடுத்தர குடும்பத்தினருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மானிய விலையில் காய்கறி களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.
பண்ணை பசுமை கடைகளில் காய்கறிகளின் விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. தற்போது எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.40-க்கு மேல்தான் விற்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT