Published : 24 Oct 2013 10:53 PM
Last Updated : 24 Oct 2013 10:53 PM

அரசு பேருந்துகளில் அதிமுக சின்னம் ஏன்? - கருணாநிதி கேள்வி

அரசு பஸ்களில் இரட்டை இலைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வியாழக் கிழமை அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சாதாரண நடைமுறை

கேள்வி: புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் விழாவில் முதல்வர் பேசியது குறித்து?

பதில்:- ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்குவதைப் பெருமையாக முதல்வர் சொல்லிக்கொண்டிருக்கிறார். எந்த ஆட்சி பொறுப்பேற்றாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்குவது என்பது சாதாரண நடைமுறை. தி.மு.க. ஆட்சி இருந்த போதுகூட நிலுவையில் இருந்த ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையும், விடுப்பு ஒப்படைப்புத் தொகையும் முறையாக வழங்கப்பட்டது.

புதிதாக பணிக்கு வந்த 53 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையே தன்னிச்சையாக அ.தி.மு.க. அரசு மாற்றியதை, அந்தத் தொழிலாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

பேச்சுவார்த்தை தாமதம்

போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதை 5 ஆண்டுகள் என்று மாற்றினார்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு 3 ஆண்டுகள் என்று திருத்தி அமைக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்தினால், தி.மு.க. சங்கத்தை அழைக்க வேண்டும் என்பதற்காகவே ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தா மல் அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது.

தி.மு.க. ஆட்சியில் கருணை அடிப்படையில் 1,183 பேர் போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்றார்கள். அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு.க. ஆட்சியில் மூன்று மடங்குக்கும் அதிகமானோர் பணி நியமனம் பெற்றார்கள். 2006-ம் ஆண்டு முதல் 2011 மே மாதம் வரை நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசாகூட உயர்த்தப்படவில்லை.

இரட்டை இலை சின்னம்

முதல்வர் தொடங்கி வைத்துள்ள அரசு பஸ்களில் எல்லாம் இரட்டை இலை சின்னம் போடப்பட்டுள்ளது. அதைப்போலவே அம்மா குடிநீர் பாட்டில் திட்டம் கொண்டு வந்தபோதும் அதில் இரட்டை இலை சின்னத்தைப் பொறித்திருப்பதாகச் செய்தி வந்தது.

எனவே இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் நிதியிலிருந்து அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்றனவா அல்லது அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா?

இவ்வாறு கருணாநிதி கேட்டுள்ளார்.

காமன்வெல்த் மாநாடு குறித்த தீர்மானம்: கருணாநிதி வரவேற்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் 3-வது அணி அமைக்கப்பட்டால் அதில் சேர்வது பற்றி தி.மு.க. பொதுக்குழு தான் முடிவு செய்யும். இந்தியாவின் நன்மைக்காக எந்த அணி அமைந்தாலும் அதை வரவேற்பேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x