Published : 12 Jun 2017 10:08 AM
Last Updated : 12 Jun 2017 10:08 AM
சென்னை குடிநீர் வாரிய லாரிகள் தொடர்ந்து நீர்வழிப் பாதைகளில் கழிவுநீரை திறந்துவிட்டு வருகிறது. அரசு நிர்வாகமே விதிமீறலில் ஈடுபட்டு வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை குடிநீர் வாரியத்தில் சுமார் 8 லட்சத்து 20 ஆயிரம் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அகற்ற 4 ஆயிரம் கிமீ நீள கழிவுநீர் குழாயை அமைத்து, குடிநீர் வாரியம் பராமரித்து வருகிறது. இந்த கழிவுநீரை சேகரித்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் பணியை 232 கழிவுநீரேற்றும் நிலையங்கள் செய்து வருகின்றன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட கழிவுநீர் குழாய்கள் பல இடங்களில் இன்னும் மாற்றப்படவில்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதும், கழிவுநீர் வெளியேறி சாலைகளில் ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் கழிவுநீரை உறிஞ்சி, தற்காலிக தீர்வு காண்பதற்காக 38 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகளையும், 43 அதிவேக உறிஞ்சும் லாரிகளையும் குடிநீர் வாரியம் இயக்கி வருகிறது.
இந்த லாரிகளில் உறிஞ்சப்படும் கழிவுநீரை, அந்தந்த பகுதிகளுக்கு அருகில் உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் விட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல், அருகில் உள்ள நீர்வழித் தடங்களில் விடுவதையே குடிநீர் வாரியம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இதுபற்றி தெரிந்தும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. புகார்கள் வந்தால், ஓட்டுநருக்கு ரூ.100 அபராதம் விதிப்பது மற்றும் எச்சரிப்பதோடு குடிநீர் வாரியம் தனது நடவடிக்கையை நிறுத்திக்கொள்கிறது.
நீர்வழித் தடங்களில் 337 இடங்களில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடித்த குடிநீர் வாரியம், ஒருபுறம் அதை தடுக்க ரூ.300 கோடியில் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்னொரு புறம், அதே நீர்நிலையில் கழிவுநீரை திறந்துவிட்டு வருகிறது. அரசு நிர்வாகமே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக புளியந்தோப்பை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் உள்ள கால்வாயில் குடிநீர் வாரிய லாரிகள் தொடர்ந்து, கழிவுநீரை திறந்துவிட்டு வருகிறது. அரசு நிர்வாகமே செய்வதால், எங்களால் ஒன்றும் கூற முடியவில்லை. இதனால் இப்பகுதியில் வறட்சி காலத்திலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. வேறு வழி இல்லாமல் சகித்துக்கொண்டு இங்கு வாழ்கிறோம்” என்றார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நீர்வழித் தடங்களில் கழிவுநீரை திறந்துவிடுவது உடனடியாக தடுக்கப்படும். அனைத்து லாரி ஓட்டுநர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT