Published : 19 Mar 2014 08:57 AM
Last Updated : 19 Mar 2014 08:57 AM
பாஜக கூட்டணியில் இன்னும் இழுபறி நீடிப்பதை அடுத்து இரண்டு விதமான பட்டியலை தயாரித்துள்ள பாஜக, பாமக-வின் முடிவை பொறுத்து அதில் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டணியில் குழப்பம்
தேமுதிக, பாமக, கொமதேக கட்சிகள் தொகுதிகளை பெறுவதில் பிடிவாதம் காட்டுவதால் பாஜக கூட்டணியில் குழப்பம் ஓய்ந்த பாடில்லை. சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்காக தேமுதிக-வும் பாமகவும் மோதுகின்றன. திருப்பூரை கேட்டு கொமதேக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செவ்வாய்க் கிழமை நடந்தது. கூட்டத்தில் பங் கேற்ற பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தென் சென்னையில் பாஜக போட்டியிடுவது நிச்சயமாக தெரிந்தும் எங்களால் அங்கே பிரச்சாரம் செய்யமுடியவில்லை.
இதனால், பாஜக-வுக்கு மட்டுமின்றி தங்களுக்கும் சிக்கல் என்பதை குறிப்பிட்ட தொகுதிகளை கேட்டு அடம்பிடிக்கும் கட்சிகள் உணரவேண்டும். எனவே, பேச்சுவார்த்தைகளை சீக்கிரமே முடித்தால்தான் தொண்டர்கள் ஆக்கப்பூர்வமாக பணி செய்ய முடியும் என்று கூட்டத்தில் வலி யுறுத்தியுள்ளோம்” என்றார்.
பாஜக-வுக்குள் உள்குத்து?
இதனிடையே, பாமக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் பாஜக-வுக்கு ஒரு மரியாதை வந்திருக்கிறது. ஆனால், தமிழக பாஜக தலைவர்கள் நடந்துகொள்ளும் விதம் தலை சுற்ற வைக்கிறது. அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் காய் நகர்த்தி கவிழ்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் இல்லாவிட்டால் போகட்டும் என்ற மனநிலையில் அவர்கள் செயல்படுகிறார்கள்’’ என்கிறார்கள்.
இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை இரவுக்குள் பாமக தங்களது முடிவினை சொல்ல வேண்டும் என்று பாஜக கெடுவைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் பாமக இருந்தால் அதற்கேற்ப ஒரு தொகுதி பங்கீட்டு பட்டியலையும், பாமக இல்லையென்றால் இன்னொரு பட்டியலையும் பாஜக தயாரித்துள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT