Published : 16 Oct 2013 05:44 PM
Last Updated : 16 Oct 2013 05:44 PM
இணைய வசதி இல்லாமலேயே மொபைல் போன் மூலம் ரயில் பயணச் சீட்டை முன்பதிவு செய்துகொள்ளும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தி உள்ளது. ஆன்லைன் மற்றும் ரயில் நிலையங்களில் வரிசையில் நின்று இணையம் வழியே பயணச்சீட்டு பெறும்போது உண்டாகும் நெரிசலைத் தவிர்க்க இந்த புதிய முறையை கொண்டுவந்திருப்பதாக நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதுகுறித்து ஐ.ஆர்.டி.சி.யின் சென்னை தெற்கு மண்டல துணை மேலாளர் கணபதி சுப்ரமணியன் கூறியதாவது:
ரயில் நிலையங்களில் மட்டுமே பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் 2005-ம் ஆண்டு முதல் ஆன்லைன் இ-டிக்கெட் வந்தது. பயணிகளே ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணச் சீட்டை பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். இதனால் நாள் ஒன்றுக்கு நான்கு லட்சத்துக்கும் அதிகமான பேப்பர் வீணானது. அதைத் தவிர்க்க எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு பயணச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது நாட்டிலேயே முதல் முறையாக இணையவசதி இல்லாத சாதாரண செல்போன் மூலமாகவே பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். கீழ்க்கண்ட வகைகளில் செல்போனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
வகை 1:
இதன்படி, ‘ஏர்டெல்’ சேவையில், ப்ரீபெய்டு கார்டு ரீசார்ஜ் செய்வதுபோல முன்கூட்டியே பணத்தை டெபாசிட் செய்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அல்லது, ஆன்லைன் மூலம் நம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை டிரான்ஸ்பர் செய்து அதை ஏர்டெல் மணி அக்கவுன்ட்டில் போட்டு அதன்மூலம் டிக்கெட் பதிவு செய்யலாம். ஏர்டெல் எண்ணில் இருந்து *400# என்ற எண்ணுக்கு டயல் செய்து படிப்படியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்கூட்டியே கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண்ணை வைத்து பயணச்சீட்டை பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு ஸ்மார்ட் போன் தேவையில்லை. ஆன்லைன் வசதியும் தேவையில்லை. சாதாரண செல்போன் போதும்.
வகை 2:
139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி பயணச்சீட்டு பெறும் முறை இது. இந்த சேவைக்கும் இணைய வசதி தேவையில்லை. இந்த சேவையை எந்த மொபைல் கொண்டும் புக் செய்யலாம். உங்கள் வங்கிக் கணக்கின் மூலம் ஐ.எம்.பி.எஸ். (இம்மீடியட் பேமன்ட் சர்வீஸ்) வழியே ஒருமுறை பாஸ்வேர்டு (OTP) வாங்கிக்கொண்டு, செல்போன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பயணச்சீட்டு பெறலாம். செல்போனில் 139 எண்ணை தொடர்புகொள்ளும்போது, ஒரு டிரான்ஸர் ஐ.டி கிடைக்கும். அந்த எண்ணுக்கு பாஸ்வேர்டை அனுப்பி டிக்கெட் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வகை 3:
இந்த சேவையை பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஜாவா சாப்ட்வேரை டவுன்லோடு செய்து, ஆந்திரா வங்கிக் கணக்கு மூலம் மட்டும் பயணச்சீட்டு பதிவு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT