Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது; தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் சமரசம்- இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பாஜக கூட்டணியில் நிலவி வந்த தொகுதிப் பங்கீடு சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பட்டியலை பாஜக மேலிடம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக தலை மையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது.

பேச்சுவார்த்தையில் சிக்கல்

சில தொகுதிகளை பாமகவும் தேமுதிகவும் விடாப் பிடியாக கேட்டதால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. நீண்ட நாட்களாக இழுபறி நிலையே நீடித்தது. அதே நேரத்தில் பாஜக தலைவர்களும் நிர்வாகிகளும் கூட்டணியில் பிளவு ஏற்படக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினர். தேமுதிக, பாமக தலைவர்களிடம் தொடர்ந்து பேசி, சிக்கலைத் தீர்க்க முயன்று வந்தனர்.

தொகுதிப் பங்கீடு முடிவாகாத நிலையில், 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை கும்மிடிப் பூண்டியில் தொடங்கினார். மேலும், பாஜக கூட்டணி பற்றியோ, நரேந்திர மோடி பற்றியோ பிரச்சாரத்தில் விஜயகாந்த் எதுவும் பேசவில்லை. இது பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும் தேமுதிக, பாமகவுடன் பாஜக தரப்பில் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது.

தேமுதிக சம்மதம்

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் சனிக்கிழமை சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளை தேமுதிக ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்துவது போல, சனிக்கிழமை அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட ஆற்காட்டில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை புகழ்ந்தார். மோடியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என கூறினார்.

இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமைக் காக ஒரு சில இடங்களை நாங்கள் விட்டுக் கொடுத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு டெல்லியில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

தேமுதிக 14, பாஜக - 8, பாமக - 8, மதிமுக – 7, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என கூட்டணி முடிவாகியுள்ளது. யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகி விட்டாலும் அந்த பட்டியலை பாஜக மேலிடம் முறைப்படி இன்று வெளியிடும் என்று கூறப்படுகிறது.

யாருக்கு எந்தெந்த தொகுதி?

தேமுதிக:

திருவள்ளூர் (தனி), வடசென்னை, மத்திய சென்னை, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, நெல்லை.

பாஜக:

கன்னியாகுமரி, கோவை, தென்சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, பெரும்புதூர், தஞ்சாவூர்

பாமக:

தர்மபுரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, வேலூர்

மதிமுக:

விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, தேனி, கரூர், காஞ்சிபுரம், ஈரோடு

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

திருப்பூர்

இந்திய ஜனநாயக கட்சி:

பெரம்பலூர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x