Published : 17 Feb 2014 10:12 AM
Last Updated : 17 Feb 2014 10:12 AM

கூட்டணிக்கு பேரம் பேசும் விஜயகாந்த்- சமத்துவ மக்கள் கட்சி மாநாட்டில் சரத்குமார் பேச்சு

“கூட்டணிக்காக பேரம் பேசுகிறார் விஜயகாந்த்” என்று, திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 2-வது மாநில மாநாட்டில் கட்சியின் நிறுவனர் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:

விஜயகாந்த் இறைவனுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார். ஏற்காட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போது, டெல்லியில் சென்று போட்டியிடுகிறார். இவர் வித்தியாசமான அரசியல்வாதி.

இப்போது டெல்லியிலிருந்து ஏமாற்றத்துடன் திரும்புவதாக செய்திகள் வந்திருக்கின்றன. யாரும் அவரைச் சீந்துவாரில்லை. சீந்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆதரவுடன் வெற்றிபெற்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகியிருக்கிறார் விஜயகாந்த். அவருக்குத் தேவை பணம். 20 சீட்டுக்கு எவ்வளவு என்று பேரம் பேசுகிறார்.

நாங்கள் 2 சீட்டுகளுக்காகக் கூட்டணியில் சேரவில்லை. திமுக கூட்டணியில் உள்ள சீட்டுகளைக் காலிபண்ணுவதே முக்கியம் என்று சட்டப் பேரவை தேர்தலின்போது தெரிவித்திருந்தோம்.

கூட்டணி தர்மத்தைக் கடைபிடிக்கிறது சமத்துவ மக்கள் கட்சி. தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடக்கிறது. சீட் கொடுப்பார்கள் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. கொடுத்தால் பெற்றுக்கொள்வோம். பெற்றதில் வெற்றி காண்போம். சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் நன்றாக இருக்கிறது.

இந்த தேர்தலில் திமுகவைச் சீந்த யாரும் கிடையாது. ராகுல்காந்திக்கு பிரதமராகத் தகுதி இருக்கிறதா? தகுதியுள்ளவர் சென்னையில் கோட்டையில் உட்கார்ந்திருக்கிறார். நிர்வாகத் திறமை உள்ளவர் ஜெயலலிதா.

இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது, கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்? கச்சதீவைத் தாரைவார்த்து கொடுத்தபோது, கருணாநிதி தமிழகத்தில் முதல்வராக இருந்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே நமது இலக்கு. மத்தியில் சிறந்த ஆட்சி அமைய வேண்டும். நிலையான ஆட்சி அமைய வேண்டும். 40 என்ற இலக்கை எட்டும்போது ஜெயலலிதா பிரதமராக வருவார். திமுக, காங்கிரஸ், விஜயகாந்த் ஒன்று சேரட்டும், பாஜக, வைகோ கூட்டணி அமைக்கட்டும். ஜெயலலிதா அமைக்கும் கூட்டணி வென்றுகாட்டும்.

முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும். ஆனால் வெகுளியாக இருக்க கூடாது. நல்ல மனம் இருக்க வேண்டும். தொலைநோக்குச் சிந்தனையும் இருக்க வேண்டும். தெலங்கானாவைப் பிரிக்க சொல்கிறார்கள். பிரிவினை நமது நாட்டுக்கு உகந்தது அல்ல. நம்பிக்கை என்ற அடிப்படையில் 6 ஆண்டுகளை தாண்டி, 7-வது ஆண்டில் இருக்கிறோம். சோதனைகளை தாண்டி வந்திருக்கிறோம். நம்பிக்கை இருக்க வேண்டும். தலைவன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நாக்கைத் துருத்தாத தலைவனாக இருக்க வேண்டும். நம்பிக்கைதான் முக்கியம் என்றார் சரத்குமார்.

ராதிகாவுக்கு பதவி

மகளிரணி மாநாடு நடத்த ராதிகா கோரிக்கை வைத்தார். சரத்குமார் பேசுகையில், “ மகளிர் மாநாட்டை நடத்துவதற்கு வரவேற்கிறேன். மாநில மகளிரணி பொறுப்பை ஏற்றால் மாநாட்டை நடத்த ஒப்புதல் அளிக்கிறேன் ” என்று சரத்குமார் தெரிவித்தார். பேச்சின் இடையே ராதிகா சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுவதாகத் தெரிவித் தார்.

திமுக மீது தாக்கு

ராதிகா சரத்குமார் பேசுகையில், திருச்சியில் குடும்பத்துக்காக ஒரு மாநாடு நடத்தப்படுகிறது. டி.வி.யில் வரும் நெடுந்தொடர்கள்போல் தி.மு.க.வில் 2ஜி விவகாரம், குடும்பச் சண்டை என்று பல்வேறு உண்மை கதைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

விஜயகாந்த் மாறாத நடிகர். தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால் என்று சாதிப்பவர். அரசியல் என்றால் பண்பு வேண்டும். ஆனால் அவருக்கு அது இல்லை என்று ராதிகா பேசினார்.

முன்னதாக மாநாட்டையொட்டி தொண்டர்களை அழைத்துச் செல்வதற்காக கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு சென்னை யிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x