Published : 03 Jun 2016 07:29 AM
Last Updated : 03 Jun 2016 07:29 AM
வெள்ள நீர் நுழையாமல் பாதுகாக் கும் விதமாக, வேளச்சேரி ராம் நகரில் பல வீடுகளை அவற்றின் உரிமையாளர்கள் 8 அடி உயரத் துக்கு உயர்த்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் வெள்ளம் ஏற்பட்டபோது, பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று வேளச்சேரி ராம் நகர். தரை தளத்தை கார் பார்க்கிங்குக்காக ஒதுக்கி, மற்ற தளங்களில் குடியிருப்புகளுடன் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்படவில்லை.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு தனி வீடாக கட்டப்பட்டவை மிகவும் தாழ்வான பகுதியில் இருந்ததால், அந்த வீடுகளில் வெள்ளம் எளிதில் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாழ்வான பகுதிகளில் கட்டப்பட்ட பழைய வீடுகளை இவற்றின் உரிமையாளர்கள் 8 அடி உயரம் வரை உயர்த்தி வருகின்றனர். ஹரியாணாவை சேர்ந்த கட்டுமான வல்லுநர்கள் உதவியுடன் ‘ஜாக்கி’ தொழில்நுட்பத்தில் வீடுகள் உயர்த்தப்படுகின்றன.
இதுபற்றி ராம் நகரை சேர்ந்த வீட்டின் உரிமையாளர் பி.சேகர் கூறியதாவது: என் வீடு 13 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது சாலைகள் அனைத்தும் உயர்த்தப்பட்டு விட்டதால், என் வீடு தாழ்வாகிவிட்டது.
இதை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதும் சாதாரண வேலை யல்ல. இடிப்பு செலவு, கட்டுமான பொருட்கள் விலை என ரூ.15 லட்சத்துக்கு மேல் செலவாகும். அரசின் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டும். பணி முடிய 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.
அதே கட்டிடத்தை ‘ஜாக்கி’ போட்டு உயர்த்த ரூ.8 லட்சத்துக் குள்தான் செலவாகிறது. இதற்காக எந்த அரசு அலுவலகத்துக்கும் நடக்கத் தேவையில்லை. 45 நாட்களில் பணி முடிந்துவிடுகிறது. இதுவரை நாம் வாழ்ந்த வீட்டிலேயே வசிக்கிறோம் என்ற மன நிறைவும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஹரியாணாவை சேர்ந்த மம்சந்த் அன் சன்ஸ் என்ற கட்டுமான நிறுவன பொறியாளர் கோபி கிஷான் கூறியதாவது:
ஒரு வீட்டை 3 அடி வரை உயர்த்த ஒரு சதுரஅடிக்கு ரூ.225 கட்டணம் வசூலிக்கிறோம். அதற்கு மேல் ஒவ்வொரு அடி உயர்த்தவும் ஒரு சதுரஅடிக்கு ரூ.75 கட்டணம். அதிகபட்சம் 8 அடி வரை உயர்த்துவோம். அந்த கட்டிடத்தின் மீது இன்னொரு தளம் எழுப்பவும் உத்தரவாதம் வழங்குகிறோம்.
இப்பகுதியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை உயர்த்தி இருக்கிறோம். இப்போது ஒரே நேரத்தில் 10 கட்டிடங்களில் பணி நடந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்துக்கு மத்திய அரசிடம் காப்புரிமை பெற்றிருக்கிறோம்.
கட்டிடத்தை ‘ஜாக்கி’ போட்டு உயர்த்த ரூ.8 லட்சத்துக்குள்தான் செலவாகிறது. இதற்காக எந்த அரசு அலுவலகத்துக்கும் நடக்கத் தேவையில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT