Last Updated : 29 Jun, 2016 10:13 AM

 

Published : 29 Jun 2016 10:13 AM
Last Updated : 29 Jun 2016 10:13 AM

தனியாக கட்சி நடத்தும் அளவுக்கு பொருளாதாரம் இல்லாததால் திமுகவில் இணைகிறோம்: மதேமுதிக நிறுவனர் சந்திரகுமார் விளக்கம்

தனியாக கட்சி நடத்த பொருளாதாரம் இல்லாததால் மக்கள் தேமுதிகவை திமுகவில் இணைக்கிறோம் என்று அக்கட்சியின் நிறுவனர் வி.சி.சந்திரகுமார் கூறினார். விஜயகாந்த் கட்டுப்பாட்டில் தேமுதிக இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு வி.சி.சந்திரகுமார் அளித்த சிறப்புப் பேட்டி:

பலரும் எதிர்பார்த்ததுபோலவே மக்கள் தேமுதிகவை திமுகவுடன் இணைப்பதாக அறிவித்துவிட்டீர்களே?

தேர்தலுக்கு முன்பே திமுகவில் இணைவதாக சொன்னோம். ‘வேண்டுமென்றே ஆட்களை இழுப்பதாக குறை சொல்வார்கள். எனவே, பொறுத்திருங்கள், பிறகு பார்க்கலாம்’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார். எனவே, மக்கள் தேமுதிகவாக செயல்பட்டோம். எங்களுக்கு தனியே கட்சி நடத்தும் அளவுக்கு பொருளாதாரம் கிடையாது. எனவே, இப்போது திமுகவில் இணைகிறோம்.

திமுக எதிர்ப்பில் உருவானதுதான் தேமுதிக. அந்தக் கட்சியுடன் கூட்டு வைக்கவில்லை என்று விமர்சிப்பது சரியா?

திமுகவை எதிர்த்தது உண்மைதான். அதனால் தேமுதிகவை அழிக்க திமுக நினைக்கவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் விஜயகாந்த் மீது 2 அவதூறு வழக்குகள்தான் போடப்பட்டன. திமுக ஆட்சியில்தான் தேமுதிக வளர்ந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் நூற்றுக்கும் அதிகமான தேமுதிகவினர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. 9 எம்எல்ஏக்களை எடுத்துச் சென்றனர். மக்களுக்கு எதிரான ஆட்சியாகவும் அதிமுக ஆட்சி இருந்தது. ஆகவே, திமுகவுடன் இணையச் சொன்னோம்.

வைகோ, அதிமுகவுக்காக வேலை செய்தார் என்று சொன்னீர்கள். இப்போது நீங்கள் திமுகவுக்காக வேலை செய்வதாக சொல்லப்படுகிறதே?

திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற என் நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டேன். எந்தவொரு மறைமுக ஒப்பந்தத்தையும் செயல்படுத்திவிட்டு ஒதுங்கவில்லை.

தேமுதிகவின் முடிவை நீங்கள் மட்டும்தான் விமர்சிக்கிறீர்கள். மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் அங்கேதானே உள்ளனர்?

தேமுதிகவில் மாவட்டச் செயலாளராக உள்ளவர்கள், அடுத்த கட்சிக்கு சென்றால் என்ன ஆவோம் என்ற அச்சத்தில் மட்டுமே அங்கே உள்ளனர். ஆனால், தொண்டர்கள் பலரும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இன்றைய சூழலில், தேமுதிகவின் அதிகார மையமாக விஜயகாந்த் இல்லை.

தேமுதிகவினருடன் பேசுவேன் என்கிறீர்கள். இது, அந்தக் கட்சியை அழிக்கும் எண்ணம்போல் தெரிகிறதே?

விஜயகாந்தின் விசுவாசிகள் யாருடனும் நான் பேசவில்லை. தேமுதிக மீது அதிருப்தியில் உள்ளவர்களைத்தான் சந்தித்து பேசவுள்ளேன். அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவே இருக்காது. இதற்கு விஜயகாந்த், சுதீஷ், பிரேமலதா ஆகிய மூவரின் செயல்பாடுகள்தான் காரணம்.

2019 மக்களவைத் தேர்தலின்போது தேமுதிகவை திமுக எதிர்பார்க்காது என்று உங்களால் சொல்ல முடியுமா?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்பிலோ, இடத்திலோ நான் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் ஏதேனும் வாய்ப்புகள் தருவதாக திமுகவில் கூறியுள்ளனரா?

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் திமுகவில் இணைகிறோம். எங்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் திமுகவில் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x