Published : 22 Feb 2014 12:59 PM
Last Updated : 22 Feb 2014 12:59 PM
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளில் தாங்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்படலாம் என்ற நம்பிக்கையே இந்த ஆவலுக்கு காரணம்.
தமிழகத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் தண்டனையை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. திமுக ஆட்சியின்போது அண்ணா பிறந்த நாளையொட்டி பலமுறை ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 2008-ம் ஆண்டில் 2405 கைதிகள் விடுதலை ஆகியுள்ளனர். அதேபோல் முந்தைய அதிமுக ஆட்சியின்போது முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 1992 மற்றும் 1993-ம் ஆண்டுகளிலும் ஆயுள் தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
7 பேர் விடுதலைக்கு தடை
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தச் சூழலில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவுகிறது. முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை அரசு விடுதலை செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கைதிகள் நம்பிக்கை
இதுகுறித்து சிறைக் கைதிகள் உரிமை அமைப்பின் இயக்குநரும், வழக்கறிஞருமான பி.புகழேந்தி கூறுகையில், ‘‘முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 1992-ம் ஆண்டில் 230 ஆயுள் தண்டனை கைதிகளும், 1993-ம் ஆண்டில் 132 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி 24-ம் தேதி முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை தமிழகத்தின் அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள் மத்தியில் நிலவுகிறது. அவர்களுடன் சேர்த்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை ஆவார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
இதற்கிடையே, தமிழகம் முழுதும் மத்தியச் சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள கைதிகள் பற்றிய விவரங்களை சிறைத் துறையிடமிருந்து மாநில அரசு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசால் இயலுமா?
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக அமைச்சரவையின் முடிவு குறித்து 3 நாள்களுக்குள் மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்காவிட்டால், குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 கைதிகளையும் விடுதலை செய்வோம் என்று முதல்வர் அறிவித்தார். இந்த விவகாரத்தில்தான் மேல் நடவடிக்கை எதுவும் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
161-வது சட்டப் பிரிவு
ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்த தமிழக அரசுக்கு எவ்வித தடையும் இல்லை. எத்தகைய குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டப் பிரிவு மாநில ஆளுநருக்கு வழங்கியுள்ளது. ஆகவே, இந்தச் சட்டப் பிரிவின்படி முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 கைதிகளையும் மற்ற ஆயுள் கைதிகளையும் விடுவிக்க மாநில அரசு முடிவெடுத்தால், அந்த அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
‘‘சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஆலோசனைக் குழுமத்தின் ஆலோசனையைப் பெற்று கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யுமேயானால், மாநில அரசின் அந்த நடவடிக்கை பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது’’ என்கிறார் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.
எனவே, குற்ற விசாரணை முறைச் சட்டம் 432-வது பிரிவின் கீழ் மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த தற்காலிகமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவைப் பயன்படுத்த தடையேதும் இல்லை என்பதால், முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி கைதிகள் விடுதலை குறித்த அறிவிப்பு ஏதேனும் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT