Published : 23 Jun 2016 02:07 PM
Last Updated : 23 Jun 2016 02:07 PM

தரை தொடுமளவுக்கு குடல் இறங்கிய மனிதர்: 30 ஆண்டு பாரத்தை இறக்கிவைத்து அரசு மருத்துவர்கள் சாதனை

30 ஆண்டுகளாக தரையை தொடும் அளவுக்கு குடல் சரிந்த நிலையில் நடமாடிய மனிதருக்கு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அபூர்வ அறுவை சிகிச்சை செய்து குறைபாட்டை சரிசெய்து சாதனை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்தவர் சேவியர் (53). ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். மனைவி இறந்துவிட்டார். இவரது சிறுகுடல், பெருங்குடல் மற்றும் சிறுநீரகப்பை ஆகியன தரையை தொடும் அளவுக்கு இறங்கிய நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக நடமாடி வந்துள்ளார். சமீப காலமாக அவரால் சரியாக நடக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்க முடியாமலும், உறங்க முடியாமலும், வேலைக்குச் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

அதனால், மனமுடைந்த இவர் கடந்த சில ஆண்டாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். உறவினர்கள் இவரை சிகிச்சைக்கு அழைத்தும் உயிருக்கு பயந்து இவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், சில மாதங்களாக சரியாக சாப்பிட முடியவில்லை. வேலைக்கும் செல்ல முடியாததால் அன்றாட உணவுக்கே சிரமம் ஏற்பட்டு அபாயக் கட்டத்தை அடைந்தார். இதையடுத்து, இவ ரை உறவினர்கள் கடந்த சில வாரங் களுக்கு முன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் அமுதா, மருத்துவ நிபுணர்கள் செல்வ சிதம்பரம், கணேசன் மற்றும் மயக்கவியல் துறை இயக்குநர் கணேஷ்பிரபு ஆகியோர் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிறுகுடல், பெருங்குடல் மற்றும் சிறுநீரக விதைப்பையை மீண்டும் வயிற்றுக்குள் பாதுகாப்பாக வெற்றிகரமாக பொருத்தினர்.தற்போது, அவர் ஆரோக் கியத்துடன் உள்ளார். 30 ஆண்டாக பெரிய பாரத்துடன் சுற்றிய அவருக்கு சிகிச்சை செய்து மறு வாழ்வளித்த மருத்துவர்களின் கைகளை பிடித்து சேவியர் உருக்கமாக நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழ வைத்தது.

புகைப்பிடித்தால் இந்த ஆபத்து வரும்

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜு கூறியதாவது:

இரைப்பை இறக்கம் பாதிப்பு எல்லோருக்கும் வருவதுதான். அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யக் கூடியதுதான். ஆனால், இவருக்கு சரியே செய்ய முடியாது என மருத்துவர்களே நினைக்குமளவுக்கு குடல்கள் வெளியே தொங்கின. மருத்துவ உலகில் இது அபூர்வ நிகழ்வு. 30 ஆண்டாக இந்த பாரத்துடன் அவர் வாழ்ந்ததே அதிசயம். மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே தொங்கிய குடல்களை உள்ளே வைத்தபோது வயிறு விரிவடைந்தது. அதனால், அவர் மூச்சு விட முடியாமல் 2 நாள் திணறினார். விஞ்ஞான முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. தற்போது 30 ஆண்டு பாரம் இறங்கிவைத்த மகிழ்ச்சியால் நிம்மதியாக ஓய்வெடுக்கிறார்.

மலச்சிக்கல், கனமான வேலை செய்வது, நாள்பட்ட புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு குடல் இறக்கம் வருகிறது. அறியாமை, அறுவை சிகிச்சை பயத்தால் சிகிச்சைக்கு தயங்குவதால் இவரைப்போல அபாயக் கட்டத்தை அடைகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x