Published : 03 Jun 2016 03:28 PM
Last Updated : 03 Jun 2016 03:28 PM

கரூர்: மாணவர் சேர்க்கைக்காக அரசு கலைக் கல்லூரியை முற்றுகையிடும் தனியார் கல்லூரிகள்

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிக்கு மாணவ, மாணவிகளை ஈர்ப்பதற்காக கரூர் அரசு கலைக் கல்லூரிகளை கலந்தாய்வு நாளில் முற்றிகையிடுகின்றன.

கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 10,045 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தொழிற்கல்வி பயில்பவர்களை தவிர மற்றவர்கள் பட்டப்படிப்பை தேர்வு செய்கின்றனர். அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைவு, சலுகைகள் கிடைக்கும் என்பதால் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு கலைக் கல்லூரிகளையே தேர்வு செய்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் 2 அரசு கலைக் கல்லூரிகளும், 20-க்கும் மேற்பட்ட தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. மாவட்டத்தில் குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டது. கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்பில் 1,260 இடங்கள் உள்ளன. இதற்கு 2,759 பேர் விண்ணப்பித்துள்ளனர். இங்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வுக்கு வந்திருந்த மற்றும் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவ, மாணவிகளை தங்கள் கல்லூரிகளில் சேர்ப்பதற்காக கரூர் அரசு கலைக் கல்லூரியின் முன்பு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரி வாகனங்களுடன் நேற்று குவிந்தன. கலந்தாய்வில் பங்கேற்கச் சென்ற மற்றும் பங்கேற்றுத் திரும்பிய மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்களை முற்றுகையிட்டு தங்கள் கல்லூரியைப் பற்றி விளக்கி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

இதற்காக அரசு கலைக் கல்லூரி நுழைவாயிலின் இருபுறமும் தனியார் கல்லூரிகளின் வாகனங்கள் வரிசையாக நின்றன. கல்லூரியின் எதிர்புறம் சில கல்லூரிகள் தற்காலிக அரங்குகள் அமைத்து மாணவர் சேர்க்கையை மேற்கொண்டன. இதில், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் மட்டுமின்றி அண்டை மாவட்ட கல்லூரிகளும் ஈடுபட்டன.

நடப்பாண்டு கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 10,045 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதால் கல்லூரிகளில் சேருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என்பதால் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அரசு கல்லூரியில் சேர இடம் கிடைக்காது என்பதை கருத்தில்கொண்டு, இங்கு வந்ததாக தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x