Published : 07 Aug 2016 09:01 AM
Last Updated : 07 Aug 2016 09:01 AM

750 கிலோ எடையுள்ள 33 அடி நீள பிரம்மாண்ட அரிவாள்: சதுரகிரி கோயிலுக்காக மதுரையில் தயாரிப்பு

சதுரகிரியில் உள்ள 10 அடி உயர கருப்பசாமி சிலையில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை பட்ட றைத் தொழிலாளர்கள் 33 அடி நீளம், 6 அடி அகலத்தில் 750 கிலோ எடையில் பிரம்மாண்ட அரிவாளை தயாரித்து வழங்கியுள்ளனர்.

தென் மாவட்டங்களில் அரிவாள் தயாரிப்புக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, திருப்புவனம் பெயர் பெற்ற இடங்கள். அதற்கு அடுத்து தற்போது மதுரை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் அரிவாள்களுக்கு சமீப காலமாக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது விவசாயத் தேவைகளுக்கு நவீன கருவிகள் வந்தபிறகு, தேவை குறைவால் அரிவாள் தயாரிப்பு தொழில் நலிவடைந்தது. அதனால், பல தலைமுறைகளாக இந்த தொழிலில் ஈடுபட்டவர்கள், மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர். மதுரை மாவட்டத்தில், ஆங்காங்கே ஒருசில குடும்பத்தினர் மட்டும் பட்டறைகளில் அரிவாள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் தெய்வங்களுக்கு படைக்க, விவசாயத் தேவைக ளுக்கு என ஆர்டர் அடிப்படையில் அரிவாள்கள் தயாரித்துக் கொடுக்கின்றனர். இவர்களில் சிலர் தெய்வங்களுக்கு பிரதிஷ்டை செய்வதற்காகவும், நேர்த்திக்கடன் செலுத்துவதற்காகவும் மட்டுமே அரிவாள் தயாரித்து வருகின்றனர்.

மதுரை தமிழ்ச் சங்கம் சாலையில் உள்ள ஞாயிற்றுக்கி ழமை சந்தைப் பட்டறைகளில் தயாரிக்கப்படும் அரிவாள்களை சுற்றுவட்டார கிராம மக்கள் தமி ழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வருபவர்க ளும் கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்த அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள கார்த்திக் என்பவரது பட்டறையில் சதுரகிரி கணேசமூர்த்தி மவுன அடிகளார் திருமடத்தில் இருக்கும் 10 அடி உயர கருப்பசாமி சிலைக்கு பிரதிஷ்டை செய்வதற்காக 33 அடி நீளம், 6 அடி அகலம், ஒரு அடி கைப்பிடி கொண்ட ராட்சத அரிவாள் தயாரித்து கொடுத்துள்ளனர். இந்த அரிவாளை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் குவிந்தனர். அவர்களின் உற்சாக கரகோஷத் துடன் அரிவாளை, பட்டறை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி, சதுரகிரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அரிவாள் தயாரித்த கார்த்திக் கூறியதாவது: இந்த அரிவாளின் மொத்த எடை 750 கிலோ. தயாரிக்க ரூ.50 ஆயிரம் வரை செலவாகி உள்ளது. இந்த அரிவாளை ஆர்டர் கொடுத்த 21 நாட்களில் தயாரித்துள்ளோம். கேரள மாநிலம், சபரிமலை அடி வாரத்தில் இருக்கும் கருப்பசாமி கோயிலுக்கு 10 அடி நீள அரிவாள் செய்து கொடுத்துள்ளேன். இதற்கு முன் அழகர்கோவிலுக்கு 25 அடி நீள அரிவாள் தயாரித்துக் கொடுத்துள்ளேன். அரிவாள் தவிர, சூலாயுதம், வேல், அக்னிச் சட்டி தயாரித்துக் கொடுக்கிறோம் என்றார்.

நாட்டிலேயே பெரிய அரிவாள்?

தற்போது 33 அடி நீளம், 6 அடி அகலத்தில் சதுரகிரி கருப்ப சாமிக்கு செய்து கொடுத்த ராட்சத அரிவாள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய அரிவாளாக இருக்கக்கூடும் எனக் கருதுகிறேன். 6 அடி முதல் 9 அடி, 10 அடி, 12, அடி, 15 அடி என இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிவாள்களை தயாரித்துக் கொடுத்துள்ளேன். தெய்வங்களுக்காக தயாரிக்கும் இந்த அரிவாள்களை கூர்மையாக தயாரிப்பதில்லை. தீயில் பதம் வைப்பதில்லை. கூர்மையாக தயாரித்து வைத்தால் ஏதாவது உயிர் பலி, ரத்தக்காயம் ஏற்பட்டால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், அவ்வாறு தயாரிப்பதில்லை.

இரும்பு தகடு, கனரகப் பொருட்களை கொண்டுதான் அரிவாள் தயாரிக்கிறோம். தெய்வங்களுக்காக இந்த அரிவாள் தயாரிப்பை விரும்பிச் செய்வதால் லாப நோக்கத்துக்காக தயாரிப்பதில்லை. இந்த அரிவாள் தயாரிப்பை புண்ணியமாகக் கருதி கடந்த 15 ஆண்டுகளாக செய்துவருகிறோம் என்றார் கார்த்திக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x