Published : 19 Jan 2017 03:31 PM
Last Updated : 19 Jan 2017 03:31 PM
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடக்கும் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இலங்கை மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிகட்டு போரட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் ஒன்றுகூடி தங்களது ஆதரவை அளித்தனர்.
மேலும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் நிறைவடையும் வரையும் இலங்கையிலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு போராட்டம்
பீட்டா அமைப்பால் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி தமிழ் நாடு முழவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இளைஞர்களின் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் இந்த தொடர் ஆர்ப்பாட்டத்துக்கு அமெரிக்கா, லண்டன், தென் ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகளில் உட்பட பல்வேறு நாடுகளிலிருக்கும் தமிழர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இலங்கை மாணவர்கள் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் ஒன்று கூடி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.
'தமிழக நண்பர்களே விடாமால் போராடுங்கள்' 'ஆதரிக்கிறோம் ஏறுதழுவலை', 'we support jallikattu', 'கடல் பிரித்தாலும் உயிர் துடிக்கும் நாங்கள் தமிழர்கள்' என்ற பதாகைகளுடன் கூடிய வாசகங்களை மாணவர்கள் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாகைகளுடன் ஆர்பாட்டக்காரர்கள்
இலங்கையில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்று வரும் போரட்டம் குறித்து இலங்கை தமிழரும், ஊடகவியலாளரும், விபுலானந்தன் 'தி இந்து' இணையதள பிரிவுக்கு ஃபேஸ்புக் வாயிலாக கூறும்போது, "ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி இலங்கையில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் நல்லூர் ஆலக வாசலில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. வெறும் முக நூல் அழைப்பை ஏற்று சுமார் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூடினர். கூடிய மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஒழுங்காகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இளைஞர்கள்.
இலங்கை ஊகடவியலாளர் விபுலானந்தன்
நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) இலங்கையிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். மாணவர்கள், இளைஞர்கள் எழுச்சியுடன் போராடினாலும் அரசியல்வாதிகள் ஒதுங்கியே நிற்கிறர்கள். அது ஏன் என்று புரியவில்லை. தற்போது இது இளைஞர்களின் எழுச்சிமிக்க ஆதரவாக மாறியுள்ளது. பெண்களும் குறிப்பாக பல்கலை மாணவர்களும் அடுத்தகட்டமாக களமிறங்க இருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கான தமிழகப் போராட்டம் நிறைவடையும் வரை தொடர்ந்து இலங்கையில் போரட்டங்கள் தொடரும்.
அரசியல்வாதிகளை அனுமதிக்காது இளைஞர்ச்கள் தன்னெழுச்சியாக நடத்தும் இந்தப் போராட்டம் தனிச் சிறப்பானது.
தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ள தமிழக மக்களின் இந்தப் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்து ஈழத்து உறவுகள் முன்னெடுப்பார்கள்" என்று கூறினார்.
தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT