Published : 08 Sep 2016 12:02 PM
Last Updated : 08 Sep 2016 12:02 PM
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ. 25 கோடி நிதியில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 13 வார்டுகளுக்கு மட்டும் ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்து மாநகராட்சியில் நேற்று தீர்மானம் நிறைவேற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த சீனிவேலு வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் கோமா நிலையில் இருந்த அவர், வெற்றிபெற்ற செய்தி கூட தெரியாமல் மரணமடைந்தார். விரைவில் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. ஏற்கெனவே, இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா மேயராக இருந்தபோது, ஏராளமான மாநகராட்சி நிதியை அப்பகுதிக்கு செலவிட்டதாக விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், இடைத்தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு மாநகராட்சி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்து, அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது. மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சாலை அமைத்தல், புதுப்பித்தல் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 25 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதியில் ரூ.10 கோடியை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட 55, 56, 58, 59, 60, 61, 62,94,95,96,97,98,99 உள்ளிட்ட 13 வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த வார்டுகளில் நிலைக்குழு தலைவர் முனியாண்டி என்பவரின் வார்டு 94-க்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.1.77 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, மாநகராட்சியில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதைப் பார்த்த மற்ற வார்டு கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். அவர்கள், 100 வார்டுகளுக்கும் சேர்த்துதான் நிதி வழங்கப்பட்டுள்ளது, ஏதோ திருப்பரங் குன்றத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதாக நினைத்து, மாநகராட்சி அந்த பகுதி வார்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
மேயர் ஒப்புதல் பேச்சால் சர்ச்சை
மேயர் பேசுகையில், திருப்பரங் குன்றம் இடைத்தேர்தலுக்காக சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வார்டுகளுக்கு மீதமுள்ள ரூ. 15 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என்றார். அதிருப்தி அடைந்த கவுன்சிலர்கள் தொடர்ந்து பிரச்சினையை எழுப்பியதால் ஒரு கட்டத்தில் மேயரும், ஆணையரும் நிதி ஒதுக்கீடு இல்லாத, குறைவான நிதி ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கு பொதுநிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றனர்.
கவுன்சிலர்களின் குற்றச்சாட்டுக்கு மேயரே பகிரங்கமாக இடைத்தேர்தலுக் காகத்தான் நிதி ஒதுக்கியதாக ஒப்புக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில் திமுக கவுன்சிலர்கள் வழக்கம்போல கலந்து கொள்ளாததால் இந்த தீர்மானம் நிறைவேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT