Published : 20 Nov 2014 10:05 AM
Last Updated : 20 Nov 2014 10:05 AM
தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 5 குழந்தைகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடுத்தடுத்த நாட்களில் 13 குழந்தைகள் வரை சிகிச்சை பலனின்றி இறந்தன.
தருமபுரியைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையிலும் 6 நாளில் 8 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்தன.
சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களை அழைத்து, டீன் மோகன் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து டீன் மோகன் கூறியதாவது: சேலம் அரசு மருத்துவமனைக்கு தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிரசவத்துக்காக கர்ப்பிணிகள் வருகின்றனர். அவர்களுக்கு உரிய முறையில் மருத்துவ சேவையாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர். இங்கு மொத்தம் 95 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். 30 இன்குபேட்டர்கள் உள்ளதால், இதில் எவ்வித பற்றாக்குறையும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் பணியில் இருந்து, சிகிச்சை அளிக்க அறிவறுத்தப்பட்டுள்ளது. எடை குறைவு, இதய கோளாறு, சிறுவயது திருமணமான பெண்கள், குறைப் பிரசவம் என ஆபத்தான நிலையில் பிரசவிக்கும் குழந்தைகள், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், தனியார் மருத்துவமனையில் இருந்தும் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். வெறும் 900 கிராம் எடை கொண்ட குழந்தையைக் கூட சேலம் அரசு மருத்துவமனையில் காப்பாற்றியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT