Published : 04 Jul 2016 11:05 AM
Last Updated : 04 Jul 2016 11:05 AM
நீரின்றி அமையாது உலகு என நீரின் அவசியத்தை உலகுக்கு வலியுறுத்திய தமிழ்ச் சமூகம், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை மிக வேகமாக மறந்து வருகிறது. இந்தச் சூழலில் அழிந்து வரும் பாரம்பரிய நீர் நிலைகளைப் பாதுகாப்பது மற்றும் புனரமைப்பது ஆகிய பணிகளை ஓசையின்றி செய்து வருகின்றனர் பொது நீர் அமைப்பினர்.
கடந்த 2 ஆண்டுகளாக பெரம் பலூர் மாவட்டத்தில் பொது நீர் அமைப்பினர், கிராமங்களில் உள்ள பொதுக் கிணறுகளைப் புனரமைக் கும் பணியில் தீவிரமாக ஈடு பட்டு வருகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஊர் பொதுக் கிணறுகளைத் தூர் வாரி, செப்பனிட்டுள்ளனர். புனரமைக்கப் பட்ட கிணறுகளின் சுவர்களில் ஓவியம் தீட்டி கிணற்றைச் சுற்றி மரக்கன்றுகள் நட்டு பேணிக்காத்து வருகின்றனர்.
சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா இந்தப் பணி களை ஒருங்கிணைத்து வருகிறார். ‘தி இந்து’விடம் அவர் தெரிவித்த தாவது:
குளம் இருந்தால் குடி (குடும்பம்) செழிக்கும். ஏரி இருந்தால் ஏர் (விவசாயம்) தொழில் சிறக்கும் என்பது தமிழ் சொலவடை. பண் டைய தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்கிவிட்டு அதன் பின்னரே ஊர்களை உருவாக்கிக் குடியேறி னர். நீர் மேலாண்மையில் நிபுணத் துவம் பெற்றவர்கள் என உலகத் துக்கு உணர்த்தியவர்கள் தமிழர் கள்.
இதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்லணை சான்று. ஆனால், அந்தத் தமிழினம் இன்று நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறி வருகிறது. புதிய நீர்நிலை களை உருவாக்காவிட்டாலும் இருப் பதையாவது அழியாமல் காத்து நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்கு அவற்றின் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் பொதுக் கிணறுகள் ஒவ்வொரு சிற்றூருக்கும் பெரிய நீராதாரமாகத் திகழ்ந்தன. அந்த நீரையே ஊர் மக்கள் பலரும் பல்வேறு தேவை களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
பின்னர், ஆட்சியாளர்கள் கூட்டுக் குடிநீர் திட்டங்களைக் கொண்டு வந்து குழாய் மூலம் தண்ணீர் வழங்கத் தொடங்கியதால் பொதுக் கிணறுகளை மக்கள் மறக்க ஆரம் பித்தனர். பல ஊர்களில் பொதுக் கிணறுகள் ஊருக்குப் பொதுவான குப்பைத் தொட்டிகளாக மாறிவிட் டன.
கிணறுகள் மழை நீரை பூமிக்குள் செறிவூட்டும் மிகச் சிறந்த அமைப்பு. மழை நீரை பூமிக்குள் செறிவூட்டும் பணிக்காகவாவது கிணறுகளைப் பாதுகாக்க வேண்டும். பொது நீர் அமைப்பினர் ஒவ்வொரு ஊராகச் சென்று, அழியும் நிலையில் உள்ள பொதுக் கிணறுகளை அறிந்து அவற்றை அந்த ஊர் மக்களுடன் சேர்ந்து மீட்டெடுக்கும் பணியை செய்துவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் திம்மூர், கொளத்தூர், பேரளி, தெற்கு மாதேவி உள்ளிட்ட ஊர் களில் 10-க்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகளை தூர்வாரி, செப்பனிட்டு, சுற்றிலும் மரக்கன்று களை நட்டுப் புனரமைத்துள்ளோம். கொளத்தூரில் குளம் ஒன்றை தூர் வாரி சீரமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுக் கிணறுகளை புனரமைத்து முடிந்ததும் கிணற்றுத் திருவிழா என ஒரு நிகழ்ச்சி நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியில், ஊர் பெரியவர்களை அழைத்து அந்த கிணற்றால் அடைந்த பலன் குறித்து பேசச் செய்து இளம் தலைமுறையினரிடம் கிணற்றின் தேவையை உணரச் செய்யும் பணி யில் ஈடுபடுகின்றனர்.
கிணற்றை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களைப் பாராட்டுதல், சுண்டல், சுக்குக் காபி போன்ற இயற்கை சிற்றுண்டிகளுடன் விழாவை நிறைவு செய்கின்றனர்.
பொது நீர் அமைப்பினர், பெரம்பலூரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குள் சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு ஓடிக்கொண்டிருந்த ஜார்ஜ் வாய்க்காலை மீட்டெடுக்கும் பணியை கையிலெடுக்கத் திட்ட மிட்டுள்ளனர். இந்த வாய்க்கால், ஆக்கிரமிப்பால் காணாமல் போய் விட்டது. அரணாரை எனும் ஊரின் அருகே, வாய்க்கால் இருந்ததற் கான அடையாளமாக கல்வெட்டு ஒன்று மட்டும் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT