Published : 26 Jun 2017 09:39 AM
Last Updated : 26 Jun 2017 09:39 AM
தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளி என்ற பெருமையை திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு இந்தப் பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 6,019 பேர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடந்து கொண்டேயிருக்கிறது. இந்த ஆண்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிப்பார்கள் என ஆசிரியர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இங்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள 22 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 164 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பல மேல்நிலைப் பள்ளிகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே ஆயிரத்துக்கும் கீழே உள்ளன. ஆனால் இந்தப் பள்ளியில் 12-ம் வகுப்பில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 1,396 பேர். அவர்களில் 1,276 மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி 1,177 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். 1,100-க்கும் மேல் 36 மாணவிகளும், 1,000-க்கும் மேல் 135 மாணவிகளும் பெற்றிருந்தனர்.
அதேபோல் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை 940 பேர் எழுதினர். அவர்களில் 851 மாணவிகள் தேர்ச்சி அடைந்த னர். முதல் மதிப்பெண் 493.
தமிழ்நாட்டின் பிற அரசுப் பள்ளிகளைப் போலவே சாதாரணப் பள்ளியாக செயல்பட்ட இந்தப் பள்ளி, இன்று சாதனைப் பள்ளியாக உயர்ந்து நிற்கிறது. 1985-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட ஆங்கில வழி வகுப்புகளும், 1994-ல் தொடங்கப்பட்ட கம்ப்யூட்டர் வகுப்புகளும்தான் இத்தகைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் என்கிறார் பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஈஸ்வரன். 1989-ம் ஆண்டு முதல் 20 ஆண்டு காலம் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், செயலாளர், பொருளாளர் பொறுப்புகளில் இருந்தவர் ஈஸ்வரன்.
பள்ளி வளர்ச்சி அடைந்த விதம் பற்றி அவர் கூறியதாவது:
1989-ம் ஆண்டு நான் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்புக்கு வந்தேன். அந்த ஆண்டு 3008 மாணவிகள் படித்தனர். அதற்கு முன்பே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தன. எனினும் பள்ளியின் அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருந்தன. குறிப்பாக கழிப்பறை வசதி மிக மோசமாக இருந்தது. கழிப்பறை வசதியை மேம்படுத்துவதற்காக ஒரு பெற்றோர் மாதம் ரூ.1 நன்கொடையாக தரும் திட்டத்தை கொண்டு வந்தோம். அடுத்த ஆண்டில் ஒரு பெற்றோரிடம் ஆண்டுக்கு ரூ.25 நன்கொடையாகப் பெற்று பள்ளியின் பிற வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினோம்.
ஆங்கில வழி வகுப்புகளில் அதிக அளவில் மாணவிகள் சேர்ந்ததால் 1991-ல் சுயநிதி வகுப்புகளைத் தொடங்கினோம். ஒரு மாணவியிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.300 கட்டணமாக வசூலித்து, 2 ஆசிரியர்களை நியமித்தோம். அதன்பிறகு பள்ளியின் வளர்ச்சியில் மிகப் பெரிய வேகம் ஏற்பட்டது. அனைத்து வகுப்புகளிலும் அரசு அனுமதித்ததை தவிர, கூடுதல் வகுப்புகளைச் சுயநிதிப் பிரிவில் நடத்தினோம்.
1994-95-ம் கல்வியாண்டில் வணிக கணிதவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் கொண்ட ஆங்கில வழி வகுப்புகள் சுய நிதிப் பிரிவில் தொடங்கப்பட்டது. ரூ.2,500 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. நாங்களே ஆசிரியர்களையும் நியமித் தோம். வேறு எங்கும் இவ்வளவு குறைந்த கட்டணத்தில் மேல் நிலை ஆங்கில வழி வகுப்புகள் இல்லாத காரணத்தால் அதிக அளவில் மாணவிகள் சேர்ந்தனர். 50-க்கும் மேற் பட்ட கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டன.
1995-ம் ஆண்டு என்பது கம்ப்யூட்டர் கல்வி பிரபலமாகத் தொடங்கிய காலகட்டம். அந்த நேரத்தில் எங்கள் பள்ளியில் இருந்த நவீன கம்ப்யூட்டர் ஆய்வகம் போல வேறு எங்குமே இல்லை. அப்போதே இன்டர்நெட் இணைப்பு பெற்றிருந்தோம். பள்ளிக்கென தனி வெப்சைட் உருவாக்கப்பட்டிருந்தது. சிறப்பாக கம்ப்யூட்டர் கல்வியை வழங்கியதற்கான தேசிய விருது 2004-ம் ஆண்டு எங்கள் பள்ளிக்கு கிடைத்தது. புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருதை வழங்கினார்.
எங்கள் பள்ளி வளாகத்தில் மாணவிகள் உருவாக்கிய மழைநீர் சேமிப்புத் தொட்டி தமிழ்நாட்டுக்கே முன்னோடியாக விளங்கியது. இதற்காக எங்கள் பள்ளி மாணவிகளை 2002-ம் ஆண்டு நேரில் வரவழைத்து பாராட்டிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ரூ.10 ஆயிரம் பரிசும் வழங்கினார்.
வேறு எங்குமே இல்லாத அறிவியல் பூங்கா ரூ.1.50 லட்சம் செலவில் உரு வாக்கப்பட்டது. செயற்கை நீரூற்று, அல்லி, தாமரை மலர் களுடன் நீர்த் தடாகம், வண்ணப் பறவைகள், மயில்கள், முயல்கள், வெள்ளை எலிகள், மீன் தொட்டிகளுடன் ஒரு சிறு உயிரியல் பூங்காவையே ஏற்படுத்தினோம்.
இவ்வாறு பள்ளியின் வசதிகளும், கல்வியின் தரமும் உயர உயர மாணவிகளின் எண்ணிக் கையும் அதிகரித்துக் கொண்டே சென்றது. குறிப்பாக ஆங்கில வழி கல்வியும், கம்ப்யூட்டர் கல்வியும் சிறப்பாக இருந் ததால் அதிகபட்சமாக 2009-10-ம் கல்வியாண்டில் 7,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் எங்கள் பள்ளியில் படித்தனர்.
2011-ல் நான் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பில் இருந்து நான் விலக நேர்ந்தது. அப்போது இருந்த கல்வியின் தரம் இப்போதும் சற்றும் குறையவில்லை. எனினும் போதிய பராமரிப்பு இல் லாததால் அறிவியல் பூங்கா, செயற்கை நீரூற்று போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகள் இப்போது பள்ளியில் இல்லை. அந்த வசதிகளை மீண்டும் ஏற்படுத்த அரசும், உள்ளூர் மக்களும் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு ஈஸ்வரன் கூறினார்.
பள்ளியின் செயல்பாடுகள் பற்றி தலைமையாசிரியர் ஆர்.சரஸ்வதி கூறியதாவது:
‘‘மேல்நிலை வகுப்புகளில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாலான பாடப் பிரிவுகள் எங்கள் பள்ளியில் உள்ளன. இதனால் பிற பள்ளிகளில் பயிலும் மாணவிகள் கூட மேல்நிலை வகுப்புகளில் அதிக அளவில் எங்கள் பள்ளியில் சேருகின்றனர். மாணவிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தாலும், கல்வியின் தரம் பாதிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளோம். தகுதி யான ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்து தரமான கல்வியை வழங்கி வருகிறோம். இதனால் தமிழகத்தின் முதன்மை யான பள்ளி என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துள்ளோம்” என்றார்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 95666 03308.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT