Published : 02 Jun 2015 12:06 PM
Last Updated : 02 Jun 2015 12:06 PM

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை ரத்து செய்க: ராமதாஸ்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். தனியார் பள்ளிகளிலும் முதல்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த உடனடியாக சட்டமியற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை உடனடியாகத் தொடங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.

தொலைநோக்கில்லாத, தாய்மொழி வழிக்கல்வி வாய்ப்பை பறித்து மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கும் இச்செயல் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் தான் கல்வி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2010 ஆண்டில் முதன்முறையாக சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.

2011ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.

2013-14 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் 5189 அரசு பள்ளிகளில் 1.03 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுகிறது.

2014-15 ஆம் ஆண்டில் மேலும் சில ஆயிரம் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்பட்டது. இத்தகைய சூழலில் மீதமுள்ள பள்ளிகளில் எவ்வளவு பள்ளிகளில் முடியுமோ, அவ்வளவு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி முறையை அறிமுகப்படுத்தும்படி பள்ளிக் கல்வித்துறை இயக்குனரும், தொடக்கப்பள்ளி இயக்குனரும் தங்களது ஆளுகையில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட அளவிலான கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படுவதால் தான் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை அங்கு அனுப்புவதாகவும், அதைக் கருத்தில் கொண்டு தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிகவும் அபத்தமான வாதமாகும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புவார்களே தவிர, தரமில்லாத ஆங்கில வழிக் கல்வி போதுமானது என்று விரும்ப மாட்டார்கள்.

கல்வியின் தரம் என்பது ஆசிரியர்- மாணவர் விகிதம், ஆசிரியர்களின் தகுதி, அவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் புத்தாக்கப் பயிற்சி, பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்ட அம்சங்கள் தான் கல்வியின் தரத்தை தீர்மானிக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டு தரமான கல்வி வழங்கப்பட்டால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கூட அரசு பள்ளிகளுக்கு மாறுவார்கள் என்பது தான் உண்மை.

இதை உணராமல் ஆங்கில வழிக் கல்வி மூலம் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்று கூறுவது அரசு பள்ளி ஆசிரியர்களை அவமதிக்கும் செயல்.

அதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை வழங்குவது தற்போதைய நிலையில் சாத்தியமற்றது. தமிழகத்திலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 48% பள்ளிகளில் 5 வகுப்புகளுக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

அவர்களால் இருக்கும் மாணவர்களுக்கே பாடம் நடத்த இயலாத நிலையில், புதிதாக ஆங்கில வழிக் கல்விக்கு இன்னொரு வகுப்பை தொடங்கி பாடம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று.

ஆங்கில வழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பல பள்ளிகளில் போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களையும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களையும் ஒன்றாக அமர வைத்து தான் பாடம் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் குறையுமே தவிர, ஒருபோதும் அதிகரிக்காது.

ஆங்கில வழிக் கல்வி என்பது ஒரு மாயை... தாய்மொழி வழிக் கல்வி மூலமாகத் தான் தரமான, சிந்தனைத் திறனை வளர்க்கும் கல்வியை வழங்க முடியும் என்பதை அரசே உணராதது வேதனை அளிக்கிறது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உள்ளிட்ட அறிவில் சிறந்த மேதைகளும், அறிவியலாளர்களும் தமிழ் வழியில் படித்தவர்கள் தானே தவிர ஆங்கில வழியில் படித்தவர்கள் அல்ல என்ற உண்மையை மக்களுக்கு விளக்கி ஆங்கில வழிக் கல்வி மீதான மோகத்தை போக்க வேண்டும். அதை விடுத்து ஆங்கில வழிக் கல்விக்கு தமிழக அரசே சாமரம் வீசுவது சரியல்ல.

அண்டை மாநிலமாக கர்நாடகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் கன்னடம் தான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தமிழை வளர்க்கும் வகையிலும், மாணவர்கள் தமிழை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் ‘அரும்பு’ என்ற பெயரில் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் மொழி வழிக் கல்விக்கு தமிழக அரசே பெரும் எதிரியாக விளங்குவதை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை.

குழந்தைகளுக்கு தாய்ப்பாலைப் போன்று மாணவர்களுக்கு தாய்மொழி வழிக் கல்வி தான் ஏற்றதாக இருக்கும் என்பதை உணர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ரத்து செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் முதல்கட்டமாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த உடனடியாக சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x