Published : 04 Jul 2016 09:19 AM
Last Updated : 04 Jul 2016 09:19 AM
சென்னை துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையம் ரூ.17 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ளது போன்ற அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட உள்ளன.
நாட்டில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் திகழ்கிறது. சென்னை கடற்கரைப் பகுதியில் 1639-ம் ஆண்டு கப்பல் மூலம் வணிகப் போக்குவரத்து தொடங்கியது. இதற்காக, 1861-ம் ஆண்டு சிறிய அளவிலான துறைமுகம் கட்டப்பட்டது. ஆனால், 1868 மற்றும் 1872-ம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக இத்துறைமுகம் சேதம் அடைந்தது. இதையடுத்து, 1881-ம் ஆண்டு செயற்கைத் துறைமுகம் அமைக்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து இன்று இத்துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.
இத்துறைமுகத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக பயணிகள் முனையம் ரூ.17 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து , சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சிரில் சி.ஜார்ஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை இக்கப்பல் சேவை உள்ளது. இதைத் தவிர, வெளிநாடுகளில் இருந்து பயணிகள் சுற்றுலா கப்பல்களும் அடிக்கடி வந்து செல்கின்றன.
இவ்வாறு கப்பலில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சென்னை துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையம் ரூ.17 கோடி செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ளது போன்று எஸ்கலேட்டர் வசதி, பாஸ்போர்ட் ஸ்கேனர், பயணிகளின் உடமைகளை சோதனையிடுவதற்கான ஸ்கேனர் வசதி, சுங்கம் மற்றும் குடியேற்றத் துறை சோதனை மையம், வரி இல்லாமல் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், முதலுதவி மையம், நவீன உணவகங்கள், ஊடக மையம், காபி ஷாப், வெளிநாட்டு கரன்சிகள் மாற்றும் மையம், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இந்திய சுற்றுலாக் கழகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா கழக உதவியுடன் இப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் ஓரிரு மாதத்தில் இப்பணிகள் நிறைவடைந்து பயணிகளின் பயன்பாட்டுக்கு இம்முனையம் திறக்கப்படும். இதன் மூலம், தமிழக சுற்றுலா மேலும் வளர்ச்சியடையும்.
இவ்வாறு சிரில் ஜார்ஜ் கூறினார்.
துறைமுகத்துக்கு வரும் பயணிகள் கப்பல்
சென்னை துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு தற்போது ஸ்வராஜ்தீப், நான்கவுரி, கேம்ப்பெல் பே, நிகோபார் மற்றும் ஹர்ஷவர்த்தனா ஆகிய பயணிகள் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு கப்பலிலும் ஒரு பயணத்தின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதைத் தவிர, பிரிட்டனில் இருந்து குயின் எலிசபெத் மற்றும் ஜெர்மனியில் இருந்து யுனிவர்சல் எக்ஸ்ப்ளோரர் ஆகிய சுற்றுலா பயணிகள் கப்பல் 6 மாதத்துக்கு ஒருமுறை சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT