Published : 28 Mar 2017 01:18 PM
Last Updated : 28 Mar 2017 01:18 PM

ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு இரு மாதங்களுக்கு பொருட்களை வழங்க அரசு முடிவு

ரேஷன் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு, இரண்டு மாதத்திற்கு பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும். அதற்குள்ளாக, ஆதார் எண்ணைப் பெற்று ரேஷன் கார்டுடன் அவர்கள் இணைக்க வேண்டும் என குடிமைப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. சென்னை மாவட்டம் நீங்கலாக, இதர மாவட்ட மக்களுக்கு ஸ்மார்ட் கார்டு சென்றடையும் வகையில், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஏற்கெனவே ரேஷன் கார்டு வைத்திருந்தவர்கள், தங்களது ஆதார் எண்ணை இணைத்திருப்பதால், ஆதார் கார்டில் உள்ள விபரங்களே ஸ்மார்ட் கார்டில் இடம் பெறவுள்ளது.

தமிழகத்தில் ஆதார் அட்டை பெற்றவர்களில் சிலர், தங்களது நிரந்தர முகவரியை அதில் குறிப்பிட்டு, ஆதார் அட்டை பெற்றுள்ளனர். ஆதார் அட்டை வழங்கும் பணி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி உள்ளது. இதில், பணி மாறுதல் உள்ளிட்ட காரணங்களால் வெவ்வேறு ஊர்களுக்கு இடம் மாறியவர்கள், தங்களது ரேஷன் கார்டினை மட்டும் புதிய முகவரிக்கு மாற்றம் செய்துள்ளனர்.

ஆதார் முகவரியை மாற்றம் செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டினை பெறும்போது, ஆதார் அட்டையில் உள்ள பழைய முகவரியே, ஸ்மார்ட் கார்டிலே இடம்பெறவுள்ளது. இத்தகைய முகவரி மாற்றம் உள்ளவர்கள் தொடர்ந்து பொருட்களை பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 100 சதவீதம் நிறைவடையாத நிலையில், ஆதார் இணைக்கப்பட்ட நபர்களுக்கான பொருட்களை மட்டுமே ஸ்மார்ட் கார்டு மூலம் பெற முடியும் என்ற தகவல் பரவியுள்ளது. ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பாதிப்பு இல்லை

இது குறித்து மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப் பட்டுள்ளதால், ஒருவரது ஆதார் கார்டில் என்ன முகவரி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே முகவரி தான் ஸ்மார்ட் கார்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும். ரேஷன் கார்டில் ஒரு முகவரி, ஆதார் கார்டில் ஒரு முகவரி என வேறுபாடு இருப்பவர்கள் அதனை இணையதளம் (www.tnpds.com) மூலம் சரிசெய்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தங்களது தற்போதைய முகவரி ஸ்மார்ட் கார்டில் இடம்பெற வேண்டுமானால், இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்து புதிய முகவரியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டினை பெற்றுக் கொள்ளலாம். பழைய முகவரியில் இருந்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து அதே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களில் சிலர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், அவர்களுக்குமான பொருட்கள் இரு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும். அதற்குள்ளாக அவர்கள் ஆதார் கார்டு பெற்று இணைக்க வேண்டும்’ என்றனர்.

ஸ்மார்ட் கார்டு பெற விதிமுறைகள்

ஏப்ரல் முதல் தேதி முதல் அந்தந்த கிராமங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வாங்க வருபவர்கள் தங்களது ரேஷன் கார்டையும், ஆதார் அட்டையையும் தவறாது எடுத்து வரவேண்டும். ரேஷன் கார்டில் ஸ்மார்ட் கார்டு பெற்றதற்கான ஒப்புகை பெற்றுக்கொள்ள வேண்டும். புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் சேர்த்தல் (பிறப்புச்சான்று, ஆதார்) மற்றும் நீக்கல் (இறப்புச்சான்று) இருப்பின் அதனை குடும்ப அட்டைதாரர்களே www.tnpds.com என்ற இணையதள முகவரி மற்றும் இ சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x