Published : 13 Feb 2014 06:38 PM
Last Updated : 13 Feb 2014 06:38 PM
தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் ரூ.300 கோடி செலவில் இரண்டு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவத் துறைக்கான ஒதுக்கீட்டு, 2014 - 2015 ஆம் ஆண்டு ரூ.7,005.02 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
100.44 கோடி ரூபாய் செலவில், 118 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை அமைக்கவும், 76.13 கோடி ரூபாய் செலவில் 64 ஆரம்ப சுகாதார மையங்களை முப்பது படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தவும், இந்த அரசு முடிவு செய்துள்ளது.
105.32 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியில் 20 புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதுடன், தற்போதுள்ள 100 நகர்ப்புர சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும். மற்ற ஒன்பது 45 மாநகராட்சிகளிலும் 77 நகராட்சிகளிலும், 37 புதிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படுவதோடு, தற்போதுள்ள 243 நகர்ப்புர சுகாதார மையங்களும் வலுப்படுத்தப்படும்.
ஒவ்வொரு வட்டாரத்திற்குண், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட இரண்டு குழுக்கள், அதாவது 770 நடமாடுண் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும். கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, 31 மாவட்டங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் வீதம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத இடங்களில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும் நிறுவப்படும்.
2014-2015 ஆண்டில், தேசிய ஊரகச் சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் 1,400 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 757.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம், ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு பேருதவியாக அமைந்துள்ளது. இத்திட்டத்தில் 2014-2015 ஆம் ஆண்டிற்கு, 716.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 300 கோடி ரூபாய் செலவில் நவீன விபத்து சிகிச்சை மையங்களுடன் கூடிய இரண்டு சிறப்பு பன்நோக்கு மருத்துவமனைகளை தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் அரசு அமைக்கும்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்புப் பிரிவுகளுக்கான ஒரு புதிய பலமாடிக் கட்டடம் 75 கோடி ரூபாய் செலவில் கட்டடப்படும். 14 கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் வழங்கப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும். மேலும், இம்மருத்துவமனையில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் உதவியுடன் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக புறநோயாளிகளுக்கான வசதிகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT