Published : 18 Feb 2014 10:20 AM
Last Updated : 18 Feb 2014 10:20 AM
தேர்தல் தொடர்பான வழக்கில் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம் தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி மனு செய்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் கருணாநிதிக்கு எதிராக அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரியான திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ஒரு புகார் கூறினார்.
வேட்புமனுவில் தனது சொத்துகள் பற்றிய முழு விவரங்களையும் கருணாநிதி அளிக்கவில்லை என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார். இந்தப் புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்திய திருவாரூர் குற்றவியல் நீதிமன்றம், வரும் மார்ச் 7-ம் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று கருணாநிதிக்கு சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கருணாநிதி மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது:
என் அம்மாவின் சமாதி அமைந்துள்ள நிலத்தை எனது சொத்தாகக் காட்டவில்லை என்று தேர்தல் அதிகாரி தனது புகாரில் கூறியுள்ளார்.
இந்த சொத்து விவரத்தை வேட்பு மனுவில் கூறாமல் மறைத்துவிட வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. வேட்புமனுவில் தவறான விவரங்களை நான் அளித்துள்ளதாக வாக்காளர்களோ அல்லது எதிர் வேட்பாளர்களோ யாருமே எவ்விதக் குற்றச்சாட்டையும் எழுப்பவில்லை. இந்நிலையில், தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியவர் தேர்தல் முடிந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தப் புகாரைக் கூறியுள்ளார்.
தொகுதித் தேர்தல் அதிகாரி என்பவர் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்படும் அதிகாரியாவார். தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன. இந்நிலையில், தற்போது இந்தப் புகாரை தேர்தல் அதிகாரி எழுப்பியுள்ளார்.
இதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை அவர் பெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறாமல், இதுபோன்ற புகார்களை கூறும் சுதந்திரம் தேர்தல் அதிகாரிக்கு இல்லை.
தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியின்றி அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானதாகும். ஆகவே, திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும், திருவாரூர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT