Published : 13 Jul 2016 01:32 PM
Last Updated : 13 Jul 2016 01:32 PM
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே பாதாளச் சாக்கடை பராமரிப்பின்றி பழுதடைந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஓடுகிறது. தற்போது கோடைக்கு நிகராக வெயிலின் தாக்கமும் குறையாததால் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் மதுரை முக்கியமானது. கொசு உற்பத்திக்கு 16 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்பநிலை உகந்த சூழல். மழைக் காலத்தில் வெப்பநிலை இயற்கையாகவே குறையத் தொடங்கும். அப்போது, கொசு உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மதுரையில் தற்போது மழையின்றி, கோடைக்கு நிகராக 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் நிலவுகிறது. அதனால், கொசு உற்பத்தி குறைவாக இருக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி பகுதியில் வெயில் அதிகமாக இருக்கும் நேரத்திலும் இரவு, பகல் நேரங்களில் வீடுகள், அலுவலகங்கள், பஸ் நிலையம், அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பொது இடங்களில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது.
வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். ஆனால், அதற்கு முன்பே தற்போது மாநகராட்சி மற்றும் புறநகர் கிராமப் பஞ்சாயத்துகளில் இரவு நேரங்களில் வீடுகளில் கொசுத் தொல்லையால் மக்கள் தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக, புறநகர் பகுதிக்குட்பட்ட 28 வார்டுகளில் கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. இதற்கு பாதாள சாக்கடை பராமரிப்பு முறையாக செய்யாமல் இருப்பதும், இந்த வசதியில்லாத பகுதிகளில் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் திறந்துவிடுவதும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்தியாவில் மொத்தம் 403 வகை கொசுக்கள் உள்ளன. இந்த கொசுக்கள் உயிரிழப்பை நேரடியாக ஏற்படுத்தாது. ஆனால், நோய் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளை பரப்பும். சர்வதேச அளவில் 117 நாடுகளில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் டெங்குவால் உயிரிழப்புகள் அதிகம். அந்நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான்.
மதுரையில் கடந்த காலங்களில் டெங்கு உயிரிழப்பு அதிகமாக இருந்தது. தற்போது டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொசு உற்பத்தியாவதற்கு, பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல் உடைந்தும், நிரம்பியும் கழிவுநீர் தேங்குவது, பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்கள் மழைநீர் கால்வாயில் கழிவுநீரை விடுவது, புறநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் உடைந்து தெருக்களில் கழிவுநீர் ஓடுவது முக்கியக் காரணம் என்றார்.
பாதாள சாக்கடை இணைப்பு இல்லாதவர்கள் கணக்கெடுப்பு
பாதாளச் சாக்கடைப் பணிக்காக, பல பகுதிகளில் தோண்டப்பட்டிருக்கும் குழிகள் மூடப்படாமல் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்குவதால் கொசு உற்பத்தியாகிறது. மதுரையில் முன்பு மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது மக்கள்தொகை அதிகரித்து தண்ணீர் பயன்பாடு, கழிவுநீர் வெளியேற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க முடியாமல் கொசு உற்பத்தி அதிகமாக இருக்கிறது. பாதாள சாக்கடை பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இணைப்பு பெறாமல் கழிவுநீரை மழைநீர் கால்வாயில் திறந்து விடுபவர்களை கணக்கெடுத்து அபராதம் விதித்து, அவர்களையும் இணைப்பு பெற வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT