Published : 02 Nov 2013 10:37 AM
Last Updated : 02 Nov 2013 10:37 AM

தீபாவளி கொண்டாடாத தீயணைக்கும் ஹீரோக்கள்- அவசர உதவிக்கு டயல் செய்க 101, 102

தீபாவளியால் ஏற்படும் தீ விபத்துகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக 6 ஆயிரத்து 801 தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஊரெல்லாம் தீபாவளி கொண்டாட இவர்கள் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக, தீபாவளி கொண்டாடாமல் இருக்கிறார்கள்.



பட்டாசு தீ விபத்துக்களை தடுப்பதற்காக, தீயணைப்பு துறையினர் ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

பாதுகாப்பு ஒத்திகையும் பொதுமக்களுக்கு நடத்தி காட்டப்பட்டது. மாணவர்களுக்கு இதுகுறித்து பாடம் நடத்தியதுடன், நடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு திரைப்படத்தையும் தீயணைப்புத் துறையினர் தயாரித்து வெளியிட்டனர். 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த படத்தில் சூர்யா பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தீபாவளி பாதுகாப்பு குறித்து தீயணைப்பு துறை இயக்குனர் ரமேஷ் குடாவ்லா கூறியதாவது: "தீபாவளி பண்டிகையன்று தமிழகம் முழுவதும் 302 நிலையங்களில் 6,801 வீரர்கள் தீயணைக்கும் பணிக்கு தயார் நிலையில் இருப்பார்கள். தீபாவளியை முன்னிட்டு விபத்து ஏற்படும் பகுதிகள் என 54 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் ஒரு தீயணைப்பு வண்டி எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து நீர் நிரப்பப்பட்ட 50 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட் டங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 10 தீயணைப்பு வண்டி களும், 200 வீரர்களும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை இல்லை...

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடை பகுதிகளில் 3 வண்டிகளும், ஜவுளி மற்றும் இனிப்பு கடை பகுதிகளில் 3 வண்டிகளும் 24 மணி நேரமும் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். சென்னையில் 900 பேர் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தீபாவளி தினத்தன்று தீயணைப்பு வீரர்கள் ஒருவருக்கு கூட விடுமுறை கிடையாது. வருகிற 4-ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும்.

தீ விபத்து குறித்து அழைப்பு வந்த 20 விநாடிகளுக்குள் வீரர்கள் அனைவரும் வண்டியில் அமர்ந்து தயாராகிவிட வேண்டும். 2 நிமிடத்தில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்பட வேண்டும். ஒரு நிமிடத்துக்கு ஒரு கிலோ மீட்டர் என்ற வேகத்தில் செல்ல வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் நெருக்கடி மிகுந்த இடங்களில் இது சாத்தியமில்லை. இருந்தாலும் முடிந்தவரை விரைவாக சென்று விடுவோம்.

தீ விபத்து ஏற்பட்டால் 101, 102 இந்த எண்களுக்கு பொதுமக்கள் உடனே தகவல் கொடுக்கவேண்டும். குறுகிய தெரு, குறுகிய சாலை பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுப்பதற்காக தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மோட்டார் சைக்கிளில் 200 லிட்டர் தண்ணீர், வேதிப் பொருளுடன் கலந்து வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ரமேஷ் குடாவ்லா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x