Published : 25 Nov 2013 12:00 AM
Last Updated : 25 Nov 2013 12:00 AM
சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று இன்னோவா வாகனம் ஒன்று லோடு ஆட்டோவை அசுர வேகத்தில் விரட்டிச் சென்றதில், பரபரப்பு மிகுந்த சாலையில் ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்தது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் வேப்பேரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் புதிய காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னலில் இந்த சம்பவம் நடைபெற்றது. மதியம் சுமார் 2 மணி அளவில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மீன்பெட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு லோடு ஆட்டோ, திடீரென்று இடதுபுறமாக ஈவிகே சம்பத் சாலையில் திரும்பியது. அதன் பின்னால் அதைவிட வேகமாக வந்த ஒரு டாட்டா இன்னோவா வாகனம் (டிஎன்-04 ஏபி 6606) அதை துரத்திக் கொண்டு வந்தது. ஈ.வி.கே. சம்பத் சாலையில் ஆட்டோ திரும்பியதும், அதன்பின்னாலேயே இன்னோவா வாகனமும் வேகமாக பின்தொடர்ந்தது.
உடனே யு-டர்ன் எடுத்த ஆட்டோ மீண்டும் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையப் பகுதிக்கு வந்தது. ஆனால் தொடர்ந்து செல்லாமல் ஈவிகே சம்பத் சாலைக்குள் மீண்டும் நுழைந்தது. அப்போதும், பின்னால் வந்த வாகனம் ஆட்டோவை விடாமல் விரட்டியது. இதனால் மீண்டும் அதேபோல் சம்பத் சாலைக்குள் நுழைந்த ஆட்டோ, பூந்தமல்லி நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு யு-டர்ன் எடுக்க முயற்சித்தது. அப்போது அந்த ஆட்டோ, சம்பத் சாலையின் இடப்புறத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து வந்த இன்னோவா வாகனமும், திடீர் பிரேக் அடித்து அதனை உரசியபடி நின்றது.
சினிமாவை மிஞ்சும் இந்த திகிலான சேஸிங் காட்சியைப் பார்த்த மக்கள் திடுக்கிட்டு நின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் சாலையின் ஓரப்பகுதிக்கு வாகனத்தை கொண்டு சென்றனர். இவை அத்தனையும், சென்னை புதிய காவல் ஆணையர் அலுவலகத்தின் மிக அருகில் 100 அடிக்கு அப்பால் நடந்தேறியது.
லோடு ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்த சத்தத்தைக் கேட்டு ஆணையர் அலுவல வாயிலில் காவலுக்கு இருந்த போலீசார் ஓடி வந்தனர். பொதுமக்களுடன் சேர்த்து அந்த வாகனத்தை நிமிர்த்தினர். ஆட்டோவில் இருந்த ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக, காயமின்றி தப்பினார்.
அதைத் தொடர்ந்து, இரு வாகனங்களையும் ஓரம்கட்டி, அவர்களிடம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கத் தொடங்கினர். இதில், இன்னோவா மீது புரசைவாக்கம் ஈவார்ட்ஸ் பள்ளி அருகே ஆட்டோ உரசியதில் ஏற்பட்ட தகராறே சண்டையாக மாறி, இவ்வாறாக சேஸிங்கில் முடிந்தது தெரிந்தது.
நடுரோட்டில் சண்டை
போலீசார் இருப்பதை மறந்து ஆட்டோ ஓட்டுநரும், இன்னோவா ஓட்டுனரும், அவரது காரில் இருந்த பெண்ணும் சண்டை போடத் தொடங்கினர். இந்த களேபரத்தில், தான் குடித்திருந்ததை ஆட்டோ டிரைவரான ரஞ்சித் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே, அங்கு வேகமாக வந்து காரை நிறுத்திய வினோத் என்ற வடநாட்டுக்காரர், இன்னோவா ஓட்டுநரை பார்த்து, “என்னை மோதிக் கொன்றிருப்பாயே, நல்ல வேளை உயிர்பிழைத்தேன்,” என்று திட்டிவிட்டு, அங்கிருந்து சென்றார். இதனால் இன்னோவா ஓட்டுநர் ஆட்டோவை விரட்டும் வேகத்தில் சாலையில் மற்ற வாகனங்களை மறந்துவிட்டதும் தெரிந்தது.
அவர்கள் சண்டை போட்டுக் கொண்டி ருந்த நேரத்தில் வேப்பேரி போலீஸ் ரோந்து வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அதுவரை மிடுக்காக பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் அழத் தொடங்கினார். ‘எனது குடும்பமே பாதிக்கப்படும். குழந்தைகள் அவதிப்படும்’ என்று கூறி சண்டைக்காரர் காலிலும், போலீசாரின் காலிலும் மாறி, மாறி விழுந்தார்.
ஆட்டோ டிரைவர் கெஞ்சல்
ஆனால், போலீசார் மசிவதாக இல்லை. இதைப் பார்த்து, மனம் இறங்கிய இன்னோவா காரில் வந்த குடும்பத்தினர், போலீசாரிடம் அவர் மீது வழக்கு எதுவும் போடாமல் விட்டுவிடும்படி கெஞ்சத் தொடங்கினர்.
ஆனால், போலீசார் ஆட்டோ ஓட்டுனரை ரோந்து வாகனத்தில் அழைத்துச் சென்றுவிட்டனர். போலீசாரிடம் இது பற்றி இரவு கேட்டபோது, இருதரப்பினர் மீதும் வழக்குப் போடவில்லை என்பது தெரியவந்தது. குடித்துவிட்டதாக ஒப்புக் கொண்ட ஒருவரை எப்படி போலீசார் வழக்குப் போடாமல் விட்டார்கள் என்பதும் புரியவில்லை.
தினந்தோறும்
இது குறித்து அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:-
இது சாலையில் வாகன ஓட்டிகளிடையே தினந்தோறும் ஏற்படும் பிரச்சினைதான். ஆனால், இன்று எல்லை மீறி போய்விட்டது. சாலையில் சிறிய பிரச்சினைகள் நடக்கத்தான் செய்யும். இவர்களில் யாரேனும் ஒருவர் பொறுமையைக் கடைப்படித்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
நல்ல வேளை, இவர்கள் பிரச்சினையில், ரோட்டில் சென்ற அப்பாவிகள் யாரும் பாதிக்கப்படவில்லை. சாலையில் வாகனத்தை ஓட்டும்போதும், இதுபோன்ற பிரச்சினைகளின்போதும் வாகன ஓட்டிகளுக்கு நிதானம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT