Published : 31 Jan 2014 11:00 AM
Last Updated : 31 Jan 2014 11:00 AM
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேரையும் உடனடியாக விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கடிதம் முழு விபரம்:
கடந்த 27-ஆம் தேதி சென்னையில் தமிழக - இலங்கை மீனவர்கள் பிரதிநிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் காரணமாக தமிழக மீனவர்கள் 295 பேரும் 45 படகுகளும் கடந்த 2 வாரங்களில் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், புதன் கிழமை ராமேஸ்வரம் மீனவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது, 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சட்ட விரோதமாக கைது செய்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கமான சூழலை தகர்க்கும் வகையில் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை அமைந்துள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கை மீனவர்கள் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும்.
இந்நிலையில், இலங்கை கடற்படைக்கு இந்தியா தனது வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட ராமேஸரம் மீனவர்கள் 38 பேரையும் அவர்களது 6 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT