Published : 29 Jan 2014 11:05 AM
Last Updated : 29 Jan 2014 11:05 AM
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும், அனைத்து பணி நாட்களிலும் முழு நேரமும் இவர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் மற்ற பாடங்களை நடத்தும்படியும் பணிக்கப்படுகின்றனர்.
முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும்போதிலும்,இவர்களுக்கு மாதம் ரூ. 5,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுவதால் மே மாதத்திற்கு ஊதியம் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியமர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் பெறும் ஊதியம் அவர்களின் உணவுக்கும், தங்குமிடத்திற்கும் கூட போதுமானதாக இல்லை.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை சிறப்பாசிரியர்கள் மேற்கொண்டுவரும் போதிலும், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும்.
இவர்களில் தகுதியுடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு/ போட்டித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர்களாகவோ அல்லது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ நியமிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துதவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT