Published : 22 Feb 2014 09:29 AM
Last Updated : 22 Feb 2014 09:29 AM
சாந்தன், முருகன், பேரறிவாள னுக்கு செப்டம்பர் 11, 2011 அன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 30-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி தூக்கு தண்டனையை ரத்து செய்யக் காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி. தொடர்ந்து அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளுக் காக வாதாடி வந்திருக்கிறார். குற்ற வாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தடை பெற்றிருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை சென்னை வந்த ராம்ஜெத்மலானி ‘தி இந்து’ நிருபர்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
தமிழக அரசின் முன்பு, இப்போது இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?
நிச்சயமாக உச்ச நீதிமன்றத் தடையை எதிர்த்து, மத்திய அரசின் சீராய்வு மனுவை எதிர்த்து போராட எல்லா வழிவகைகளும் தமிழக அரசுக்கு உள்ளன. அவர்கள் விடுவிக்கப்பட்டதன் காரணம், இரண்டு தண்டனைகள் கூடாது என் பதன் அடிப்படையில்தான். அவர் களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டால் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அரசியல் சாசனத்திலேயே அப்படி இல்லை.
தமிழக அரசு செய்ததில் எந்த விதமான விதிமீறல் இருந்தது?
எந்தவிதமான விதிமீறல்கள் இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அட்டர்னி ஜெனரலின் மனுவை நான் இன்னும் வாசிக்கவில்லை. உச்ச நீதி மன்றம் சட்ட மீறல்களின் அடிப்படை யில் முடிவு செய்யவில்லை.
குற்றவாளிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி பல ஆண்டுகளாக காத்திருப்பதால் ஏற்பட்ட மன அழுத்தம், அதனால் அவர்கள் அனுபவித்த சித்திரவதை போன்றவற்றை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது. தவிர, தமி ழக அரசு எதையும் புதிதாக செய்யவில்லை. மொத்த வழக்கை யும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சின்னப்ப ரெட்டி ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார். இந்த தீர்ப்பை காமன்வெல்த் நாடுகளின் “பிரிவி கவுன்சில்” ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அவர்களை விடுவிப்பது தேசிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியிருக் கிறதே?
என்னைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு முதல் முறையே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கக் கூடாது. உலகில் பல நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டன. தவிர, அவர்கள் ஏற்கெனவே 23 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டனர். அதுவும் ஆயுள் தண்டனையாக அல்ல. ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்நோக்கிய தண்டனையாக கழித்துள்ளனர். இது நான்கு ஆயுள் தண்டனைகளுக்கு சமம். ஒரு குற்றத்துக்காக எத்தனை தண்டனைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும்? வழக்கில் இவ்வளவு காலதாமதம் ஏன் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
வழக்கு விசாரணை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
விசாரணையின்போது மொத்தம் 26 பேர் குற்றவாளிகள் என்று முதலில் கூறினர். ஆனால் இறுதியில் 19 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கு அவ்வளவு பலவீனமானதாக இருந்திருக்கிறது. கொலை வழக்கு மற்றும் தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுகிறீர்கள், அதனடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பிறகு தடா வழக்கிலிருந்து குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அப்போது தண்டனை குறைப்பு இருந்திருக்க வேண்டும்தானே? அதனால்தான் உச்ச நீதிமன்றம் தொடக்கத்திலேயே மரண தண்டனை விதித்திருக்கக் கூடாது என்று நான் கூறுகிறேன்.
பொதுவாக தேசத்தின் மனநிலை தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறதே..
அப்படி இல்லை. சில அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அப்படி செய்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் நியாயமான யாரும், தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கும் முடிவை வரவேற்க வேண்டும்.
பேட்டியின்போது ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT