Published : 22 Sep 2016 08:17 AM
Last Updated : 22 Sep 2016 08:17 AM
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூரில் குடவோலை முறை தேர்தல் கடந்த 9-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. கி.பி. 907 முதல் 955 வரை அப்பகுதியை ஆண்ட முதலாம் பராந்தக மன்னன் காலத்தைச் சேர்ந்த 3 கல்வெட்டுகள் இதற்கு சான்றாக திகழ்கின்றன. பண்டைய காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அறியப்பட்ட தற்போதைய உத்திரமேரூரின் கிராம உறுப் பினர்களுக்கான தகுதிகள், தேர்தல் முறைகள், பதவிக்காலம் குறித்த பல்வேறு செய்திகள் அந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இத்தனை சிறப்பு வாய்ந்த உத்திரமேரூர் பகுதியில்தான் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு அதிக தொகை கேட்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறன.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அத்தியூர் மேல்தூளி ஊரட்சி உள்ளது. இது அத்தியூர், மேல்தூளி, சோழனூர், கடம்பூரார்புரடை மற்றும் ஆதி நாராயணபுரம் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியது. வாக்காளர் எண்ணிக்கை 1,320. இங்கு ஊராட்சித் தலைவராக தற்போது அதிமுகவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சி தனி தொகுதியாக அறிவிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், ஆதி நாராயணபுரத்தைச் சேர்ந்த தலித் மக்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுக்க கிராமத்தினர் முடிவெடுத்தாக கூறப்படுகின்றது.
ஆனால் தலைவர் பதவியை பிடிக்க ஆதிநாராயணபுரத்தைச் சேர்ந்த நால்வரிடையே கடும் போட்டி நிலவியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, ஏல முறை யில் தலைவரை போட்டியின்றி தேர்ந்தெடுக்க கிராம முக்கியஸ் தர்களால் தீர்மானிக்கப்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ஏலம் கேட்பதில் போட்டி ஏற்பட்டு முடிவில் ரூ.4.2 லட்சத்துக்கு ஏலம் கேட்ட செல்லன் என்பவரின் மகன் கேசவன் ஏலத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிமன்ற தலைவராக அவரை முடிவு செய்து, தேர் தலில் போட்டியின்றி தேர்ந் தெடுக்க உள்ளதாக, மேற்கண்ட கிராமங்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மற்ற கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊராட்சி மட்டுமில்லா மல், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காக்கநல்லூர், நல்லூர் போன்ற பல்வேறு ஊராட்சிகள் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள ஒருசில வார்டு கவுன்சிலர் பதவிக்கும், ஏல முறையில் உறுப்பினர்கள் தேர்ந் தெடுக்க இருப்பதாக கூறப்படு கிறது.
இதுகுறித்து, அத்தியூர் கிராம மக்கள் கூறியதாவது: கடந்த முறை தேர்தல் மூலம் ஊராட்சி மன்ற தலைவரை தேர்வு செய்தோம். ஆனால், தற்போது ஏல முறையில் தலைவரை தேர்வு செய்துவிட்டதாக கிராமம் முழுவதும் தகவல் பரவி வருகிறது. ஏலத் தொகையை, ஆதி நாராயணபுரம் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட உள்ளதாக தெரிவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து பதவிகளை ஒதுக்கீடு செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. எனவே, முறையான அறிவிப்புகளை வெளியிட்டால் மட்டுமே ஊராட்சி மற்றும் வார்டுகளின் உண்மை நிலை தெரியவரும். எனினும், ஏல முறையில் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக, அப்பகுதியில் அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றார்.
குடவோலை முறையை ஏற்படுத்தி ஜனநாயக தேர்தலுக்கு வித்திட்ட உத்திரமேரூர் பகுதியில், ஏல முறையில் ஆட்களை தேர்வு செய்வது தேர்தல் ஜனநாயகத் துக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT