Published : 12 Mar 2014 05:07 PM
Last Updated : 12 Mar 2014 05:07 PM
ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னையில் தமிழக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் பிரேம்கலா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு சென்னை - ஆர்.ஏ.புரம் குமாரசாமி ராஜா சாலையில் அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மார்ச் 20-ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ். அதிகாரிகள், துறை வல்லுனர்கள் நேர்காணலுக்கு பயிற்சி அளிப்பார்கள். மாதிரி நேர்முகத்தேர்வுகள் (மாக் இண்டர்வியூ) நடத்தப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்போருக்கு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் 10 நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்படும். அதோடு செலவினங்களுக்காக ரூ.2 உதவித்தொகையும் வழங்கப்படும்.
மெயின் தேர்வில் வெற்றிபெற்ற தேர்வர்கள் இந்த இலவசப் பயிற்சியில் சேரலாம். அவர்கள் உடனடியாக தங்கள் பெயரை அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 044-24621909, 24621475 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அகில இந்திய அளவில் 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 3003 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அரசு சென்னையில் நடத்தி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தில் 58 பேர் வெற்றிபெற்றதாக அதன் முதல்வர் பேராசிரியை பிரேம்கலா ராணி தெரிவித்தார்.
இதேபோல், சென்னை சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் படித்த 141 பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக அதன் இயக்குநர் டி.சங்கர் கூறினார். சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கல்வியகத்தில் 74 பேர் வெற்றிபெற்றிருப்பதாக அந்த மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு நேர்முகத்தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT