Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

மோடி சென்ற பாதையில் பைக்கில் புகுந்த இளைஞர்- போலீஸார் தீவீர விசாரணை

நரேந்திரமோடி சென்ற பாதையின் குறுக்கே மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வி.ஜி.பி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடைக்கு காரில் சென்றார்.

இதை முன்னிட்டு ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பைலட் வாகனங்கள் முதலில் செல்ல, நரேந்திரமோடியின் வாகனத்துக்கு முன்னும் பின்னும் 17 வாகனங்கள் பாதுகாப்புக்காக சென்றன.

தாம்பரத்தை கடந்து வாகனங்கள் சென்ற நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சாலைக்குள் புகுந்து மோடியின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையே நுழைந்துவிட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஹெல்மட் அணிந்து கொண்டு வேகமாக சென்றார். அவர் வாகனத்தை நிறுத்த சொல்லி காவலர்கள் சை்கை காண்பித்தும் அவர் நிற்காமல் சென்றார்.

அவரை நிறுத்த முயற்சி செய்த ஒரு காவலரின் வாகனத்திலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதினார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு காவலர்கள் ஒரு வாகனத்தில் விரட்டிச் சென்று அவரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை நயினார்குப்பத்தை சேர்ந்த கார்த்திக் (19) என்பது தெரிந்தது.

“நரேந்திரமோடி வருகிறார் என்பது எனக்கு தெரியாது.என்னிடம் லைசென்ஸ் இல்லை. போலீஸார் என்னை விரட்டியதும் லைசென்ஸ் கேட்பார்களோ? என்றுதான் வேகமாக சென்றேன்” என்று கார்த்திக் கூறியிருக்கிறார்.

அவர் மீது 273, 337-வது பிரிவுகளின் கீழ் விபத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x