Published : 15 Mar 2014 05:51 PM
Last Updated : 15 Mar 2014 05:51 PM
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும், சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தன் ஆதவாளர்களையும் சந்தித்த மு.க.அழகிரி சனிக்கிழமை மதியம் 2.45 மணியளவில் மதுரை திரும்பினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரை சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். பிறகு சிரித்த முகத்துடன் பத்திரிகையாளர்களைப் பார்த்து, "எல்லாம் தெரியும்ல உங்களுக்கு. அடுத்து என்ன செய்யப் போறீங்கன்னு திருப்பித் திருப்பி அதையே தான் கேட்கப் போறீங்க. நான் தான் ஏற்கெனவே சொல்லிட்டேன்ல" என்றவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அழகிரி அளித்த பதில்களும் வருமாறு:
மதுரைக்கு எதற்காக வந்துள்ளீர்கள். அடுத்த திட்டம் என்ன?
மதுரை நான் வாழ்கிற இடம். மதுரை மீனாட்சியை மாற்ற முடியுமா? அதுபோலத்தான் நானும். அதான் சொல்லிட்டேன்ல. 17-ம் தேதி கூட்டம் போட்டிருக்கோம். என் ஆதரவாளர்கள் கூட்டம். அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படி நான் நடப்பேன்.
இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு தி.மு.க. தலைமையிடம் இருந்து யாராவது பேசினார்களா?
தலைமையில் இருந்து யாரும் பேசவில்லை. தலைமையே எங்களைத் தடுத்தாக்கூட நாங்க அங்கதான் இருப்போம்.
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்தது காங்கிரஸ் கட்சி என்கிறார்கள். ஆனால், நீங்களோ காங்கிரஸ் ஆட்சியை நல்லாட்சி என்கிறீர்களே?
நாங்க அந்த ஆட்சியில இருந்தோம்ல அப்புறம் நல்ல ஆட்சின்னு சொல்லாம கெட்ட ஆட்சின்னா சொல்ல முடியும்? எங்களைப் பொருத்தவரைக்கும் அவர் (பிரதமர்) என் துறைக்கு நல்லது செஞ்சாரு. நாட்டு மக்களுக்கு அதன் மூலமாக நான் நல்லது செய்தேன். அதனாலதான் பிரதமரைப் பார்த்து நன்றி சொல்லிட்டு வந்தேன்.
உங்களைப் பற்றிய கேள்விகளுக்கு ‘தேவையில்லாத செய்திகளை நான் பார்ப்பது இல்லை’ என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்கிறாரே?
அவரே எனக்குத் தேவையில்லாதவர் தானே.
மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தீர்களே, அதை பிரதமர் ஏற்றுக் கொண்டாரா?
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், தேர்தல் அதிகாரிகளை கேட்டுத்தான் சொல்லணும் என்றார் பிரதமர். தேர்தல் முடிஞ்ச பிறகும் கொஞ்ச நாள் அவர் பிரதமராக இருக்கலாமாம்ல. அந்த நேரத்துல செஞ்சி கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கார்.
மதுரை வேட்பாளர் வேலுச்சாமி உங்களைச் சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?
பார்க்கலாம். வந்தாப் பார்க்கலாம். அப்படி அவர் என் வீட்டுக்கு வந்தா நீங்களும் வாங்க.
ஜெயலலிதாவுக்குப் பயந்த அழகிரி ஆட்கள்!
மு.க.அழகிரி மதியம் 1.20 மணிக்கே மதுரை வருவார் என்ற எதிர்பார்ப்பில் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவரது கார் டிரைவர் உள்பட பலர் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர். ஆனால், 2.15 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்ற பிறகுதான் அழகிரி ஆதரவாளர்களான பி.எம்.மன்னன், எஸ்.எஸ்.கௌஸ்பாட்சா, மிசா பாண்டியன் உள்பட பலர் விமான நிலையத்துக்குள் நுழைந்தனர். இதுகுறித்து மிசா பாண்டியன் கூறுகையில், "நேரம் அப்படியிருக்கு. இப்ப நாங்க உள்ளே போனா, அந்தம்மாவைப் பார்க்க வந்ததா கிளப்பி விட்டுருவாங்கல்ல. அதான் அந்தம்மா கிளம்பின பிறகு வாரோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT