Published : 14 Feb 2014 10:10 AM
Last Updated : 14 Feb 2014 10:10 AM
அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு அறிவித்த நீங்களே எங்களுக்கான தொகுதியில் அருந்ததியர் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் வேறு யார் நிறுத்துவார்கள்?’ - தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இப்படிக் கடிதம் எழுதியிருக்கிறது அருந்ததியர் அமைப்புகளில் ஒன்றான தமிழ்ப்புலிகள் அமைப்பு.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் இளவேனில் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில் கருணாநிதிதான் அருந்ததியர் களுக்கு 3.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கினார். தேர்தலுக்கு இது பொருந்தாது என்றாலும் அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை தேர்தலில் வழங்க வேண்டும். கருணாநிதி எங்கள் மீது கூடுதல் அக்கறை உள்ளவர் என்பதாலும் மறுபடியும் ஆ.ராசாவையே நீலகிரி வேட்பாளராக அறிவித்து விடக்கூடாது என்பதாலும் இந்த கோரிக்கையை அவரிடம் கூடுதல் அழுத்தத்துடன் வைக்கிறோம்.
கடந்தமுறை, அருந்ததியர் அதிகம் வசிக்கும் நீலகிரி தொகுதியில் அருந்த தியர் அல்லாத ஆ.ராசாவை எம்.பி.யாக்கியதால் எங்களின் குரலை எடுத்தொலிக்க ஆள் இல்லை.
தமிழகத்தில் 60 லட்சம் அருந்ததியர்கள் உள்ளனர். இதில் பெரும்பகுதியினர் கோவை மண்டலத்தில்தான் உள்ளனர். கோவை மண்டல தனி தொகுதிகளில் இருந்து 2004 தேர்தல் வரை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே எம்.பி.க்களானார்கள். கடந்தமுறை ஏமாற்ற மடைந்தோம்.
இந்தமுறையும் நீலகிரி தொகுதிக்கு ஆ.ராசா விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதிமுக-விலும் அருந்ததியர் அல்லாத ஒருவரை நிறுத்துவதற்காக அந்த நபரை மாவட்டச் செயலாளராக்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிற கட்சிகளும் இதேபோன்ற நடவடிக்கையில் இறங்கும். எனவேதான் முன்கூட்டியே, எங்களுக்கான உரிமையை பறிக்காதீர்கள் என்று அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் இதை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம்.
ஆனால், யாருமே இந்தப் பிரச்சினை குறித்து இதுவரை வாய்திறக்கவில்லை. எனவே நீலகிரியில் அருந்ததியரை நிறுத்தும் கட்சிக்கே அருந்ததியர் ஓட்டுகள் விழும் வண்ணம் பிரச்சாரம் செய்வோம்.
இவ்வாறு இளவேனில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT