Published : 16 Mar 2014 12:03 PM
Last Updated : 16 Mar 2014 12:03 PM

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: நெல்லையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.தேவதாச சுந்தரத்துக்கு ஆதரவு கேட்டு, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை அவர் வாக்கு சேகரித்தார். திருநெல்வேலி அருகே தாழையூத்து, டவுன் வாகையடிமுனை, ஆலங்குளம் பகுதிகளில் அவர் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா மக்களை தேடி வருவார். தேர்தலுக்குப்பின் மக்களைப்பற்றி கவலைப்படமாட்டார். பிரச்சாரத்தின்போது அதை செய்வோம், இதை செய்வோம் என்றெல்லாம் வாக்குறுதிகளை அளிக்கிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போதும் மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாகியும் அவை நிறைவேற்றப்படவில்லை.

தமிழகத்தில் 5 முறை ஆட்சியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார். கடந்த 2006-2011-ம் ஆண்டுவரை நடைபெற்ற ஆட்சிக் காலத்தில் வேறு எவரும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றியிருந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கி பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களை நிறைவேற்றியிருந்தார். இதுபோன்று ஒரு திட்டத்தையாவது அதிமுக ஆட்சியில் செயல்படுத்தியிருக்கிறார்களா?

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆலங்குளம் பகுதியில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் அரசுப் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இருந்தபோதும், பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது. பால், மணல், இரும்பு கம்பி, ஜல்லி என்று அத்தியாவசிய பொருள்களின் விலை விஷம்போல் ஏறியிருக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாத ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பாடம் புகட்ட திமுக.வை ஆதரியுங்கள் என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x