Published : 19 Nov 2014 10:39 AM
Last Updated : 19 Nov 2014 10:39 AM
எம்.பி-க்கள் ஒவ்வொருவரும் தங்களது தொகுதியில் தலா ஒரு கிராமத்தைத் தத்தெடுக்கும் பிரதமர் மோடியின் திட்டத்தைs செயல்படுத்த அதிமுக எம்.பி-க்களுக்கு ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த கன்னியாகுமரி, தருமபுரி தொகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து எம்.பி-க்களும் தங்களது தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, அதனை மேம்படுத்த வேண்டும். முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாக, தனது தொகுதியான வாரணாசியில் ஜெயாப்பூர் என்னும் கிராமத்தைத் தத்தெடுத்து வளர்ச்சி பணிகளையும் தொடங்கி வைத்தார். அதன் பின் பிற மாநிலங்களிலும் எம்.பி-க்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர்.
பாஜக-வினரால் குழப்பம்
ஆனால், தமிழகத்தில் பாஜக-வினர் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவதாலும், அதிமுக-வின் இக்கட்டான காலகட்டங்களில் பாஜக போதிய அளவு கைகொடுக்காததாலும் பிரதமரின் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதா, வேண்டாமா என அதிமுக-வைச் சேர்ந்த 37 மக்களவை, 11 மாநிலங்களவை எம்.பி-க்களிடம் குழப்பம் ஏற்பட்டது. எனவே இந்த விவகாரத்தை கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். உத்தரவு வரும்வரை இதுதொடர்பான எந்தப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என எம்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அனுமதியால் சுறுசுறுப்பு
இந்நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அக்கட்சியின் எம்.பி-க்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், எவ்வித பாகுபாடும் காட்டாமல் அனைத்து சமுதாயத்தினரும் வாழக்கூடிய பின்தங்கிய கிராமத்தைத் தேர்வு செய்து, அங்குள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறும் அதிமுக எம்.பி-க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து எம்.பி-க்களும் கிராமங்களைத் தத்தெடுக்கும் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தேர்வான கிராமங்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட ரங்கம் தொகுதியில் உள்ள தாயனூர் என்ற கிராமத்தை திருச்சி எம்.பி ப.குமாரும் மதுரை - நத்தம் சாலையில் உள்ள செட்டிகுளம் என்ற கிராமத்தை மதுரை எம்பி ஆர்.கோபாலகிருஷ்ணனும், சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் என்ற கிராமத்தை விருதுநகர் எம்பி டி.ராதாகிருஷ்ணனும், சாணார்பட்டி அருகே உள்ள ராகளாபுரம் என்ற கிராமத்தை திண்டுக்கல் எம்பி எம்.உதய குமாரும், தேவகோட்டை ஒன்றியத்தில் உள்ள திருமணவயல் கிராமத்தை சிவகங்கை எம்பி பி.ஆர்.செந்தில்நாதனும் தேர்வு செய்துள்ளனர். அதிமுக சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 37 எம்.பி-க் களும் உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து கிராமத்தை தேர்வு செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி, தருமபுரி
இது ஒருபுறமிருக்க, மாநிலங்களவை எம்.பி-க்களுக்கு எல்லை வரையறை இல்லாததால் எந்த மாவட்டத்தில், எந்த ஊரை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என்ற விதி உள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-விடம் தோல்வியடைந்த கன்னியாகுமரி, பாமகவிடம் தோல்வியடைந்த தருமபுரி தொகுதிகளில், அதிமுகவின் ஒட்டுமொத்த மாநிலங்களவை எம்.பி-களும் களமிறக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது.
இதுபற்றி அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ’அதிமுக சார்பில் 11 பேர் மாநிலங்களவை எம்.பி-களாக உள்ளனர். இவர்களில் 2 பேர் கன்னியாகுமரி மாவட்டத்திலும், 9 பேர் தருமபுரி மாவட்டத்திலும் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இத்தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT