Published : 28 Mar 2017 10:12 AM
Last Updated : 28 Mar 2017 10:12 AM
அந்த இடம் அவ்வளவு பர பரப்பாக இருக்கிறது. வரிசை யாக நிற்கின்றன காவல் துறை வாகனங்கள். தீயணைப்பு வாகனம் நிற்கிறது. ஏரிக் கரையில் மக்கள் கூட்டமாக கூடியிருக்கிறார்கள். பரந்துவிரிந்த அந்த ஏரிப் பரப்பு முழுவதும் போலீஸ்காரர்கள் குவிக்கப் பட்டிருக்கிறார்கள். அத்தனை பேர் கையிலும் ஆயுதங்கள். மண்வெட்டி, கடப்பாரை, இன்ன பிற கருவிகளுடன் ஏரியை சிரத்தையாக தூர் வாரு கிறார்கள் போலீஸ்காரர்கள்.
காவல் துறையினர் என்றில்லை, முறை வைத்துக்கொண்டு விவசாயத் துறை ஊழியர்கள் தூர் வாருகிறார்கள். கனிம வளத் துறை ஊழியர்கள் தூர் வாருகிறார்கள். கல்வித் துறை ஊழியர்கள் தூர் வாருகிறார்கள். பெரும் தொழிலதிபர்கள் பலரும் ஏரிகளைத் தத்தெடுத்திருக்கிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப் பிய நாடுகளில் இருந்து உதவிகள் குவிகின்றன.
இன்னொரு பக்கம் பாரபட்சம் இல்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அரசியல்வாதியின் ஆக்கிரமிப்பு தொடங்கி அரசுத் துறை கட்டிடங்கள் வரை எதுவும் தப்ப முடியவில்லை. யாரும் எதுவும் பேச முடியாது. மொத்த நீர்நிலைகளும் கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டன.
தொலை உணர் செயற்கைக்கோள் உதவியுடன் Lidar (Light Detection and Ranging) தொழில்நுட்பம் மூலம் கதிர்வீச்சுகள் பூமியை ஊடுருவி ஏரியின் உண்மையான பரப்பளவை தேடித் துலாவுகின்றன. விநாடிக்கு நான்கு லட்சத்துக்கு அதிகமான கதிர் வீச்சுகளை உமிழும் தொழில்நுட்பம் அது. அச்சு பிசகாமல், அங்குலம் விடாமல் அலசி, ஆராய்ந்து ‘ஸ்கெட்ச்’போட்டு கொடுத்துவிடுகிறது அது.
தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட ‘மிஷன் காகதீயா’ இயக்கத்தின் கீழ் நடக்கும் வேலைகள் தான் இவை. மொத்தம் 46,653 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள் அடையாளம் காணப்பட்டு, இதுவரை 8,000 ஏரிகளை மீட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இதுவரை அறுவடை செய்துள்ள தண்ணீரின் அளவு மட்டும் 2.4 டி.எம்.சி-க்கும் அதிகம். ஹைதராபாத், வாரங்கல், ரங்காரெட்டி, நிஜாமாபாத், நல்கொண்டா, மேடேல், மஹபூப் நகர், கம்மம், கரீம் நகர் என்று அத்தனை மாவட்டங்களில் வேலைகள் வேக மெடுக்கின்றன.
ஹைதராபாத்தில் மட்டும் வகைதொகையில்லாமல் ஆக்கிர மிக்கப்பட்டிருந்த 15 ஏரிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. ஏரிகள் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் கண்கூடாக விவசாயம் பலமடங்கு செழித்திருப்பதை காண முடிகிறது. மீன்பிடித் தொழில் அமோகமாக நடக்கிறது. கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தி ருக்கிறது. தெலங்கானாவில் உள்ள பல்வேறு தடுப்பணைகள் மற்றும் ஆறுகளும் இதே தொழில்நுட்பம் மூலம் மீட்கப்படும் என்று சூளுரைத் திருக்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
தமிழகத்திலும் இப்படி ஓர் அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்று ஏக்கம் எழுகிறது அல்லவா? ஆனால், நடந்தது என்றுச் சொன்னால் நம்பவா போகிறீர்கள்? வேறுவழியில்லை, நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகள் அதேபோன்ற பணிகள் தமிழகத்திலும் நடந்தன. அங்கே ‘மிஷன் காகாதீயா’ எனில் இங்கே ‘வள ஆதாரங்கள்’ மீட்பு பணி. அங்கே Lidar தொழில்நுட்பம் எனில் இங்கே LISS (Linear Imaging Self Scanning Sensor) தொழில்நுட்பம்.
கடந்த 2010-11-ம் ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தின் தொலைஉணர் தொடர்பு நிறுவனம் மூலம் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர் தொடர்பு நிறுவனத்தின் வல்லுநர்கள் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித் துறையின் பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கு மேற் கண்ட தொழில்நுட்பம் மூலம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அடையாளம் காண பயிற்சி அளித்தார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் நில அளவைத் துறையால் வரை யறுக்கப்பட்ட நில அளவை வரைபடங் களைக் கொண்டு ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் பணிகள் தொடங்கின. அந்த நில அளவை வரைபடங்களைக் கணினித் திரையில் LISS தொழில்நுட்பத்தின் மூலம் ‘சூப்பர் இம்போஸிங்’ செய்தார்கள். இதன் மூலம் தோன்றிய இருவேறு வரைபடங்களைப் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற ஏரிகள் எவை என்று கண்டுபிடிப்பதைவிட ஆக்கிரமிக்கப்படாத ஏரி எது என்று கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருந்தது. ஏராளமான ஏரிகள் காணாமல் போயிருந்தன. ஏரிகள் பலவும் கட்டிடங்களாகவும் குடியிருப்பு களாகவும் சாலைகளாகவும் வயல் களாகவும் தோப்புகளாகவும் துண் டாடப்பட்டிருந்தன. ரத்த நாளங் களைப் போல ஓடிய கால்வாய்கள் கண்டந்துண்டமாக வெட்டி களவாடப் பட்டிருந்தன. பெரும்பாலான ஏரிகளுக்கு இனி நீர்வரத்துக்கு வழியே இல்லை என்று புரிந்தது.
இவ்வாறு ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்துக் கால்வாய்கள், மிகை நீரை வெளியேற்றும் வாய்க் கால்கள், தூர்ந்துப்போன ஓடைகள் உள்ளிட்ட அனைத்தும் முழுமை யாக கண்டுபிடிக்கப்பட்டன. அவை ஒன்றியம் வாரியாக வரைப்படங் களாகத் தயார் செய்யப்பட்டன. கண்டுபிடித்த அத்தனையும் கணினி மயப்படுத்தப்பட்டன. அவை அனைத்தும் ஊரக வளர்ச்சித் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. உண்மை யில் அடுத்து என்ன செய்திருக்க வேண்டும்? தெலங்கானாவில் செய்ததைப் போல நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டுமா, இல்லையா? ஆனால், மொத்தமாக தூக்கிக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஏன் வராது வெள்ளம்? ஏன் வராது வறட்சி? ஏன் சாக மாட்டார்கள் விவசாயிகள்?
தமிழகத்தில் செயற்கைக்கோள் உதவியுடன் தயாரான நீர்நிலைகள் தொடர்பான வரைபடம்.
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்டுள்ள 2016-17ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் வரிகள் இவை: “அண்ணா பல்கலைக்கழகத் தொலைஉணர் தொடர்பு நிறுவனம் மூலம் வள ஆதார வரைப்படங்கள் (Resources map) அனைத்து மாவட் டங்களுக்கும் கிடைக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வரைபடங்களின் அடிப்படையில், முந்தைய காலங்களில் பெற்றிருந்த கொள்ளளவை நீர் ஆதார அமைப்புகள் பெறும் வகையிலும், நிலத்தடி நீர் அளவை உயர்த்தும் பொருட்டும், செயற்கைக்கோள் உதவியுடன் தயார் செய்யப்பட்ட படங்களின் உதவியோடு நீர் ஆதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கம்போல தமிழகம் மிளிர்கிறது ஆவணங்களில் மட்டும்!
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT