Published : 31 Jan 2014 09:13 PM
Last Updated : 31 Jan 2014 09:13 PM
அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு, தேமுதிக மாநாடு வெற்றி பெறுவதை தடுக்க முயல்கிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எறஞ்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் ஊழல் எதிர்ப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இந்திய நாட்டின் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், நடத்துகின்ற ஊழல் எதிர்ப்பு மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் இந்தியாவின் எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கின்ற வகையில் "ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம்" என்கின்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெறும் திடல் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கழகக் கொடி கட்டுவதற்கும், பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கும், பிற அலங்காரங்கள் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பிளக்ஸ் பேனர் வைப்பதற்காக கட்டப்பட்ட மூங்கில் சாரம், கொடிக் கம்பங்கள் போன்றவை விழுப்புரம் மாவட்ட காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
தமிழ்நாட்டில் காவல்துறையினுடைய கெடுபிடிகளும், அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர் விளம்பரங்கள், மற்ற பிற விளம்பரங்கள் என எதை செய்வதற்கும் உரிய அனுமதி வழங்காமலும், ஒரு சில இடங்களில் காலம் தாழ்த்தி வழங்கியும், அனுமதிக்காக பல இடங்களுக்கு நமது கழக நிர்வாகிகளை அலைகழிப்பதும், ஏற்கனவே வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை கழட்டி எறிவதும் என அதிமுக அரசு காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு மாநாடு வெற்றி பெறுவதை தடுக்க முயல்கிறது.
ஆனால், அதே நேரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக பிளக்ஸ் பேனர்கள் ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுபோய், தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பாலியல் வன்கொடுமை என்ற நிலைமைதான் உள்ளது. இதை சீர்படுத்தி சட்டம் ஒழுங்கை சரியாக பேணிக் காத்திட தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, தேமுதிகவின் பிளக்ஸ் பேனர்களை அகற்றுவதுதான் காவல்துறை செய்யும் வேலையா?
மாநாட்டிற்கு வருவதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்த தனியார் பேருந்துகளை செல்லக் கூடாது என அச்சுறுத்தப்படுவதாகவும், அதற்காக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகைகளை தனியார் பேருந்து முதலாளிகள் திருப்பி கொடுப்பதாகவும் மாவட்ட கழக செயலாளர்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுபோன்ற இன்னல்களுக்கும், இடைஞ்சல்களுக்கும் தேமுதிகவை சார்ந்த யாரும் அஞ்சிடப் போவதில்லை என்று ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வண்ணம் அலைகடலென தொண்டர்கள் ஆர்ப்பரித்து வரவேண்டுமேன கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாநாட்டின் வெற்றியை தடுப்பதற்கான அனைத்து தகிடுதத்த வேலைகளையும், மாபாதக செயல்களையும் ஆளும் தரப்பில் இருந்து செய்வதற்கு தயாராக இருப்பார்கள். இதையெல்லாம் தொண்டர்கள் தங்களுடைய முயற்சியால் முறியடித்து, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மாநாட்டுத் திடலை வந்தடையும் வகையில் உங்களுடைய பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
பொதுமக்களை பெரிதும் பாதிக்கின்ற, வாட்டி வதைக்கின்ற முக்கிய பிரச்சினையான லஞ்சமும், ஊழலும் அறவே ஒழிக்கப்பட வேண்டும். மிக உயர்ந்த நோக்கத்தோடு பொது மக்களுக்காக நடைபெறுகின்ற இந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பெரும் அளவில் பொதுமக்களை கலந்து கொள்ளச் செய்து, ஊழல் எதிர்ப்பு மாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு கழக நிர்வாகிகளையும், கழகத் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT