Last Updated : 29 Jan, 2014 12:00 AM

 

Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

தொகுதிதான் இல்லாமப் போச்சு... வேட்பாளராச்சும் குடுங்க- புதுக்கோட்டை மாவட்ட மக்களின் வேதனை

தொகுதிதான் இல்லாமப் போச்சு.. வேட்பாளராவது புதுக்கோட்டை மாவட்டத்து ஆட்களா நிறுத்துங்க’’ என்று அரசியல் கட்சிகளுக்கு புதுக் கோட்டை மாவட்டத்து மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பில் புதுக் கோட்டை தொகுதி நீக்கப்பட்டு, இந்த மாவட்டத்துக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி களில் கரைக்கப்பட்டன. அதன்படி பார்த்தால் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இப்போது மொத்தம் நான்கு எம்.பி.க்கள்.

நால்வரில் ஒருவர்கூட புதுக் கோட்டையில் இல்லை. திருச்சி அதிமுக எம்.பி. குமாருக்கு முகவரி மட்டும்தான் புதுக்கோட்டையில்; அவரது முகாம் எல்லாம் திருச்சியில்தான் இருக்கிறது. மொத்தத்தில் மாவட்டத்துக்கு வாய்த்த 4 எம்.பி.க்களையுமே பார்ப்பது அரிதாய் இருக்கிறது என்று புலம்பும் புதுகை மக்கள், “இந்தத் தேர்தலிலாவது புதுக்கோட்டை மாவட்டத்து ஆட்களை நிறுத்தி ஜெயிக்க வையுங்கள்’’ என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

தொகுதி பறிப்புக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று அறிக்கைகளை அள்ளிவிட்ட அரசியல் கட்சிகள், அதன் பிறகு நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்காதது மாவட்ட மக்களை மேலும் வெறுப்படைய வைத்திருக்கிறது.

புதுக்கோட்டை மக்களின் ஆதங்கம் குறித்து திமுக மாவட்டச் செயலர் பெரியண்ணன் அரசுவிடம் பேசினோம். “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கட்சியில் பணம் கட்டி இருக்கிறார்கள். தனியாக பட்டியல் ஏதும் இதுவரை கேட்கவில்லை. கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். அதில் மாற்றம் இருக்காது’’ என்றார்.

காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் மாநில துணைத் தலைவருமான டி.புஷ்ப ராஜ், “கட்சியின் உத்தரவுப்படி திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட பட்டியலைத் தயாரித்து வைத்திருக்கிறோம். அந்தப் பட்டியல் மாநிலக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு அவர்கள் வேட்பாளரை இறுதி செய்வார்கள்’’ என்று சொன்னார்.

தேமுதிக மாநில துணைத் தலைவர் எஸ்.ஜாஹிரிடம் கேட்டதற்கு, ’’புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சுமார் 150 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கே தேர்தலில் வாய்ப்பளிக்க தலைமைக்கு நிச்சயம் பரிந்துரைப்போம்’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x