Published : 10 Jan 2014 01:24 PM
Last Updated : 10 Jan 2014 01:24 PM

கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழகம் முழுவதும் 12 லட்சம் வாட்டர் கேன்களின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கும் குடிநீர் கேன் விற்பனை நிலையங்களில் தரமற்ற குடிநீர் வழங்குவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானே முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்தது.

இந்த வழக்கு 8-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பொதுப் பணித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது சலீம், “ தடையில்லாத சான்றிதழ் கோரி 855 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பங்களை அளித்தன. அதில், நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படும் பகுதிகளில் அனுமதி வேண்டி 252 நிறுவனங்களும், ஓரளவுக்கு பாதிப்புள்ள பகுதிகளில் அனுமதி வேண்டி 570 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன” என்று தெரிவித்தார். இந்நிலையில், நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்படும் 252 நிறுவனங் களுக்கு நீதிபதி தடை வித்தார்.

இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் 9-ம் தேதி (வியாழக்கிழமை) காலை முதல் காலைவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் 12 லட்சம் வாட்டர் கேன்களின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் ஏ.ஷேக்ஸ் பியர் கூறியதாவது:–

அனைத்து மக்களுக்கும் பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் தமிழகம் முழுவதும் 900–க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அடைக்கப்பட்ட குடுவைகளில் (கேன்கள்) தண்ணீர் சப்ளை செய்து வருகிறோம். இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்று (ஐ.எஸ்.ஐ.) பெற்று கேன் வாட்டர் விற்பனை செய்கிறோம். சுற்றுப்புற சூழலுக்கு எவ்வித கேடும் விளைவிக்காத வகையில் ஆலைகளை அமைத்துள்ளோம். ஆலை அமைந்துள்ள எந்த இடத்திலும் எங்கள் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடவில்லை.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 252 நிறுவனங்களை மூடுவ தற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளோம். இதனால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கேன் வாட்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் தமிழகம் முழுவதும் 12 லட்சம் வாட்டர் கேன்கள் நிறுத்தப்பட்டன. சென்னையில் மட்டுமே 4 லட்சம் வாட்டர் கேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தலைமை செயலரிடம் மனு கொடுத்துள்ளோம். 10-ம் தேதிக்கு பிறகும் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், எங்களது வேலைநிறுத்தம் தொடரும் என்றார் ஏ.ஷேக்ஸ்பியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x