Published : 07 Feb 2014 08:36 PM
Last Updated : 07 Feb 2014 08:36 PM
வேலூர் மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பிரிசன் பஜார் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. இதில், ரூ.84,800 மதிப்புள்ள சிற்றுண்டி, சாப்பாடு விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. வேலூர் சிறையில் காலணி, தோல் பொருட்கள், சேலம் சிறையில் அலுமினிய பாத்திரங்கள், கோவை மத்திய சிறையில் கைத்தறி, சென்னை புழல் சிறையில் பேக்கரி தொழிற் சாலைகள் உள்ளன. சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட் களை விற்பனை செய்ய டெல்லி திகார் சிறையைப் போன்ற விற்பனை மையம் ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒவ்வொரு மத்திய சிறையில் செயல்படும் தொழிற்சாலைகளின் அடிப்படை யில் பிரிசன் பஜார் தொடங்க தமிழக சிறைத்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை புழல் சிறையில் பேக்கரி விற்பனை மையம், வேலூர் மத்திய சிறையில் தோல் பொருட்கள், சிறை வளாகத்தில் தயாராகும் காய்கறிகள், இயற்கை உரங்கள் விற்பனை மையம் மற்றும் உணவு விடுதி தொடங்கப்பட்டன.
கடந்த ஜனவரி 4-ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு எதிரில் உள்ள பொதுமக்கள் காத்திருக்கும் அறையில் பிரிசன் பஜார் தொடங்கப்பட்டது. பிரிசன் பஜார் தொடங்கப்பட்டதில் இருந்து அமோக விற்பனை நடந்துவருகிறது. அதிலும், குறிப்பாக பிரீடம் கேண்டீன் என்ற சிற்றுண்டி உணவகத்தில் பொதுமக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
சிற்றுண்டி, உணவகத்தில் காலையில் பொங்கல், பூரி, வடை, பகல் நேரத்தில் சாப்பாடு, இரவு நேரத்தில் சப்பாத்தி, பரோட்டா விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல்-ரூ.20, பூரி ஒரு பிளேட்-ரூ.20, வடை-ரூ.5, சாப்பாடு, சாம்பார், பொரியல், மோர், அப்பளம்-ரூ.30, சப்பாத்தி மற்றும் பரோட்டா ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிரிசன் பஜார் தொடங்கப்பட்ட 4-ம் தேதி முதல் இம்மாதம் 5-ம் தேதி வரை சிற்றுண்டி, சாப்பாடு விற்பனை மூலம் ரூ.84 ஆயிரத்து 800, முள்ளங்கி, கத்திரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் ரூ.9,500-க்கும் தோல் பொருட்கள் ரூ.7,800-க்கு விற்பனையாகி யுள்ளன. பிரிசன் பஜார் தொடங்கப் பட்ட ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் கூறுகையில், “வேலூர் பிரிசன் பஜாரில் சுமார் 150 கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரிசன் பஜார் நல்ல நிலையில் இயங்குவதால் அதன் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT