Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM
தமிழகத்தில் தொடங்கிய சில நாட்களிலேயே, ஆம் ஆத்மி கட்சியில் கோஷ்டிப்பூசல் ஏற்பட்டு உள்ளது. ஆம் ஆத்மி பெயரில் 3 பிரிவுகளாக செயல்படுகின்றனர்.
டெல்லியில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு, தமிழகத்தில் கிளைகளை ஏற்படுத்தும் வகையில், சென்னையிலும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரிலும், கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையி லும் அலுவலகங்களை அமைத்து உறுப்பினர் சேர்க்கை நடப்பதாக தகவல்கள் வெளியாயின.
இம்மாத இறுதியில் மாநாடு
இந்நிலையில், கட்சியின் மாநில பொருளாளர் எனக் கூறிய ஆனந்தகணேஷ், ‘இந்தமாத இறுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக மாநாடு நடக்க இருக்கிறது. இதில் டெல்லி முதல்வரும், கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏராளமானோரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. தவறாக நடப்பவர்கள் ஆம் ஆத்மியில் நீடிக்க முடியாது. இதுவரை ஆறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் நீக்கப் பட்டுள்ளனர்’ என்றும் கூறியதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய லாளர் பொறுப்பிலுள்ளதாகக் கூறும் பாலகிருஷ்ணன் குழுவினர், அமைந்தகரை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
எங்களை நீக்கியதாக கூறியவர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் அல்ல. கட்சியில் உறுப்பினரை நீக்க வேண்டும் என்றால், செயற்குழு கூடி பரிந்துரைக்க வேண்டும். ஆனந்த கணேசிடம் கட்சி தொடர்பான கணக்குகளை கேட்டோம். அதற்கு அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அதோடு எங்களுக்கு தெரியாமல் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டார் என்றார்.
இதற்கிடையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக ஒருங்கிணைப்பாளருமான கிறிஸ்டினா சமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எம்.லெனின் இந்தப் பிரச்சினை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், ‘அமைந்தகரையில் எண். 653, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த கட்சி அலுவலகம், அங்கிருந்து ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. தற்போது அங்கு ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் இருப்பதாகக் கூறுவது பொய். அந்த அலுவலகத்துக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் நடந்துவருவதாக, அமைந்தகரை அலுவலகத்திலிருந்து கூறுவோர், கட்சியின் அங்கீகார மற்றவர்களாவர்’ எனக் கூறி யுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT